விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் `காற்றுக்கென்ன வேலி’. இந்தத் தொடரில் தமிழ்க்குமரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ஹரி என்பவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய இறுதிச்சடங்கு நேற்று அவரது வீட்டில் நடைபெற்றிருக்கிறது. ஹரி குறித்து அவருடைய நண்பரும் `காற்றுக்கென்ன வேலி’ தொடரில் முன்னர் நடித்திருந்தவருமான ராகவேந்திரனிடம் பேசினோம்.
“எனக்கு அவன் தம்பி மாதிரிதான். நான் பொதுவா யாருடனும் குளோஸ் ஆக மாட்டேன். செட்ல ரொம்ப அமைதியாவே இருப்பேன். ஆனா ‘காற்றுக்கென்ன வேலி’ ஷூட்டிங் ஸ்பார்ட்ல நானும், ஹரியும் அதிகமா பேசியிருக்கோம். எப்படி ஸ்கிரீன்ல நடிக்கணும்… எக்ஸ்ட்ராவா டயலாக்ல ஏதாவது சேர்த்துக்கலாமான்னுலாம் கேட்டுட்டே இருப்பான். நல்லா பேசிட்டு இருப்பான்… திடீர்னு அமைதியாகிடுவான். ஸ்பாட்ல அவனே லிரிக்ஸ் எழுதி கானா பாடுவான்.
அவன்கிட்ட ‘எப்படி இப்படி லிரிக்ஸ் எழுதி உடனே பாடுற? எனக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடு’ன்னு அடிக்கடி கேட்டிருக்கேன். லைஃப் பற்றி ரொம்ப யோசிச்சிட்டே இருப்பான். எல்லார் முன்னாடியும் ஜெயிச்சுக் காட்டணும்னு சொல்லிட்டு இருப்பான். ஒருசில சமயம் நானே சோகமா இருந்தா கூட அவனுக்கு பாசிட்டிவிட்டி கொடுத்துட்டு இருப்பேன். அவன் இறந்துட்டான்னு தெரிஞ்சதும் ரொம்ப ஷாக் ஆகிடுச்சு. அவனுக்கு 24 வயசுதான் ஆகுது! டக்குன்னு இப்படியொரு முடிவை எடுத்துட்டான்னு முதலில் அவன் மேல கோபம்தான் வந்தது.
‘காற்றுக்கென்ன வேலி’, ‘தவமாய் தவமிருந்து’ன்னு ரெண்டு புராஜெக்ட்ல நடிச்சிட்டு இருந்தான். ‘புராஜெக்ட் போயிட்டு இருக்கும்போது ஏன் மன அழுத்தத்துக்கு உள்ளானான்’ன்னு எனக்கும் தெரியல. அவன்கிட்ட பாட்டுப் பாடி இன்ஸ்டாகிராம்ல போஸ்ட் போடுன்னு சொல்லிட்டே இருப்பேன். அவன் எதனால தற்கொலை செய்துக்கிட்டான்னு இன்னமும் தெரியல. அவன் நிலைமை அவனுக்கு மட்டும்தான் தெரியும். அவனுடைய இறுதிச் சடங்கில் கலந்துகிட்டேன். அவன் அம்மா, அப்பாவைப் பார்க்கவே ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. அவன் இறுதிச் சடங்கில் அத்தனை பேர் கலந்துகிட்டாங்க. ‘இத்தனை பேரை சம்பாதிச்சு வச்சிட்டு நீ ஏன்டா இந்த முடிவை எடுத்த?’ன்னுதான் எனக்கு அப்ப தோணுச்சு. சினிமா ஒண்ணுதான் ஆப்ஷன்னு இல்ல… நீ நல்லா பாடுற… உனக்கு நிறைய வாய்ப்புகள் இருக்குன்னு அவன்கிட்ட சொல்லுவேன். கடைசியில் என்னையும் சேர்த்து ஏமாத்திட்டு போயிட்டான்!” என்று கலங்கினார்.
எழுத்தாளர் தீபா ஜானகிராமன் ஹரி குறித்து அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அதில்,
“நான் பணி செய்த ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு ஹரி வந்திருந்தார். அன்றைய தினம் ஆடிஷன் நடந்து கொண்டிருந்தது. ஹரியின் முறை வரும்போது தனக்கு நன்றாகப் பாட வருமென்று அடுத்தடுத்து கானா பாடல்களாகப் பாடிக் கொண்டே இருந்தார். மேஜையைத் தட்டியபடி இரண்டு பாடல்கள், நின்று கொண்டு ஒரு பாடல், ஆடிக்கொண்டே இரண்டு பாடல்கள் என நிறுத்தத் தோன்றவில்லை. அவருக்காகவே ஒரு கதாபாத்திரத்தை அந்த சீரியலில் உருவாக்கினோம். நன்றாக நடித்தார். அந்தக் கதாபாத்திரத்தை அடிக்கடி கானா பாடல்களைப் பாடுகிற வகையில் அமைத்திருந்தோம். அதற்கென ஒரு ரசிகர் வட்டமும் உருவானது. அந்த சீரியலுக்கு திரைக்கதை வசனம் நான் எழுதியதால், முதலிலேயே ஹரியை அழைத்து, ‘இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டு வேண்டும் ஹரி… ரெடி பண்ணிக்கோங்க!’ என்றால் பதினைந்தாவது நிமிடம் “நல்லாருக்கான்னு சொல்லுங்க மேடம்” என்று வாட்ஸ்அப்பில் பாடல் வரும். அவரே பாடல் வரிகளை எழுதி மெட்டும் போட்டுவிடுவார்.
மாதமொருமுறை என்னை வந்து சந்தித்துக் கொண்டிருந்தார். அவர் எனக்குப் பாடச் சொல்லிக் கொடுத்து நான் பாடிய கானா வீடியோ ஒன்று அவரிடத்தில் உண்டு. ‘உங்க ஞாபகமா நான் வச்சிக்கறேன்’ என்று போனில் வைத்துக் கொண்டிருப்பார். எனக்கு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஆரம்பித்து அதன் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். ‘நீங்க பாடினதை இன்ஸ்டால போட்டு விடட்டுமா?’ என்று கேட்டு அடிக்கடி சிரித்துக்கொண்டே பிளாக்மெயில் செய்வார்.
சில நாள்களாகத் தொடர்பில் இல்லை. ஒரு நாள் நான் அழைத்திருந்தேன். “வாய்ப்பு இல்ல மேடம்… உங்க முன்னாடி ஜெயிச்சிட்டு வரணும்னு ஆசை. நீங்க படம் பண்ணா, எனக்கு நடிக்க வாய்ப்பு குடுங்க. அதுக்குள்ள ஜெயிச்சிடுவேன்” என்றார். சில இடங்களில் வாய்ப்புக்காகச் சொல்லியிருந்தேன். அவரது நண்பர்களும் தேடிக் கொண்டிருந்தார்கள். அவசரப்பட்டுவிட்டார்.
நண்பர்களிடம் நேற்றைய தினம் பேசியிருக்கிறார். அவர் பேசிய நண்பர்களும் இதைச் சொன்னார்கள். ‘நல்லாத்தான் பேசினான்’ என்றுதான் எல்லோருமே சொல்கிறார்கள். சினிமாவுக்கும் சீரியலுக்கும் எப்போதுமே தேவைப்படுவது உழைப்பு, திறமை, விடா முயற்சி மட்டுமல்ல மிக முக்கியமாக பொறுமை.
வாய்ப்புக் கேட்பவர்களிடம் சொல்வேன், ‘ஒரு போன் கால்ல ஒருத்தருக்கு எல்லாமே மாறிடும். அதுதான் சினிமாவோட மேஜிக். அந்த போன் கால் எப்ப வேணாலும் வரும்…’ என்பேன். ஹரிக்கும் சொல்லியிருக்கிறேன். ஒன்றும் சொல்வதற்கில்லை. அவரவர் மனதின் பாரம் அவரவர்க்கு… ஆழ்ந்த இரங்கல்கள் ஹரி!” எனப் பதிவிட்டிருந்தார்.
ஹரிக்கு அவருடைய ரசிகர்கள் பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். எந்த ஒரு பிரச்னைக்கும் நிச்சயம் தற்கொலை ஒரு தீர்வல்ல!
தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள்:
தற்கொலைத் தடுப்பு மையம் – 104
சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் – 044 – 24640050, 28352345.
பெண்களுக்கான தீர்வு மையம் – 1091
+ There are no comments
Add yours