யோகி பாபுவுக்கு தான் வலைப்பயிற்சியில் பயன்படுத்திய கிரிக்கெட் பேட்-ஐ பரிசளித்த தோனி!

Estimated read time 1 min read

பயிற்சியின்போது தான் பயன்படுத்திய கிரிக்கெட் பேட்டை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பரிசளித்துள்ளதாக நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவரது நகைச்சுவையில், அண்மையில் வெளியான ‘லவ் டுடே’, ‘வாரிசு’ ஆகியப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு நடித்திருந்த ‘பொம்மை நாயகி’ சமீபத்தில் வெளியான நிலையில், இந்தப் படமும் ஓரளவு வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் அடுத்தடுத்து, ரஜினியின் ‘ஜெயிலர்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் பேட்டுடன் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோவைப் பகிர்ந்து, “வலைப் பயிற்சியின்போது தோனி பயன்படுத்திய பேட் இது, நேரடியாக அவரது கைகளிலிருந்து வந்துள்ளது. பேட்டினை பரிசளித்தற்கு மிக்க நன்றி தோனி சார். உங்களின் கிரிக்கெட் மற்றும் சினிமா நினைவாற்றலை எப்போதும் ரசிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வீடியோவிலும் நன்றி தோனி சார் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அந்தப் பேட்டில் ‘வாழ்த்துகள் யோகி பாபு’ என்று தோனி கையெழுத்திட்டுள்ளார். எப்போதும் தமிழ்நாடு குறிப்பாக சென்னை மீது தனி பிரியம் கொண்ட கிரிக்கெட் வீரர் தோனி, தனது ஓய்வு முடிவையே சென்னையில் தான் அறிவித்தார். மேலும் அவர் மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி நடத்தி வரும் தோனி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், முதன்முதலாக திரைத்துறையில் அதுவும் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ள ‘LGM- Let’s Get Married’ என்ற அந்தப் படத்தில் யோகி பாபுவும் நடிக்கவுள்ளார். பள்ளியில் படித்தபோது கிரிக்கெட் வீரராக இருந்த யோகி பாபு, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், கிரிக்கெட் விளையாடுவதை இப்போதும் வழக்கமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே அவருக்கு தோனி தனது கிரிக்கெட் பேட்டை கொடுத்திருக்கலாமென சொல்லப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours