எந்த தாய் தந்தையும் ஜெயித்து விட்டு வா என கூறமாட்டார்கள், ரிஸ்க் எடுக்காதவர் வாழ்க்கை முட்டாளுக்கு சொந்தமானது, குழந்தைகளுக்கு தன்னைத் தானே காதலிக்க கற்றுக் கொடுங்கள் என திரைப்பட நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா பேசியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கிரீன் ஆப்பிள் கிட்ஸ் என்ற தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தம்பி ராமையா, பதினோரு வயதில் எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் படம் பார்ப்பதற்காக என் தாயிடம் 50 பைசா கேட்டேன், எனது அம்மா கொடுக்கவில்லை. என் அம்மாவை எதிர்த்து பேசியதோடு, வீட்டில் இருந்த முட்டையை திருடி 50 பைசாவிற்கு விற்று அடிமைப்பெண் படம் பார்க்க சென்றுவிட்டேன். அதில் எம்ஜிஆர் பாடும் ”தாய் இல்லாமல் நான் இல்லை” என்ற பாடலை கேட்டு மனம் நொந்து வீட்டிற்கு வந்து, என் தாயின் காலடியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். என் தாய் முட்டையை திருடிவிட்டாய் நான் அடிப்பேன் என பயந்து விட்டாயா என கேட்டார்கள். அப்போது நான் வாழும் வரை சத்தியமாக உங்களை எதிர்த்துப் பேச மாட்டேன் என்று கூறினேன். அந்த நொடி எனக்கு மாற்றத்தை தந்தது, நான் யார் என்று என்னை சுய ஆய்வு செய்ய வைத்தது, தாயின் அருமை பற்றி எனக்குத் தெரிய வந்தது.
ரிஸ்க் எடுக்காதவர் வாழ்க்கை முட்டாளுக்குச் சொந்தமானது. அதனால் நான் ரிஸ்க் எடுத்ததால் சினிமாவிற்கு வந்தேன். எந்த தாய் தந்தையும் சினிமாவில் போய் ஜெயித்து விட்டு வா என கூறியதாக சரித்திரமே கிடையாது. ஒரு லட்சம் பேர் சினிமாவுக்கு சென்றாலும் ஒருவர் தான் வெற்றி பெறுகிறார். அவரைத்தான் இந்த உலகம் கொண்டாடும். சினிமா என்பது ஒரு மேஜிக் பீல்ட்.
குழந்தைகளிடம் கவனத்தை உருவாக்குங்கள். உனக்கு நான் இருக்கிறேன் என்ற நேசிப்பை உருவாக்குங்கள். குழந்தைகள் எது செய்தாலும் பாராட்டுங்கள். தன் உடலையும் குரலையும் காதலிக்க கற்றுக் கொடுங்கள். தனது உடலை தானே காதலிக்கும் எந்த குழந்தையும் தவறு செய்யாது. உறவுகளைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லித் தாருங்கள், குழந்தைகளுக்கு பொய் சொல்ல கற்றுக் கொடுக்காதீர்கள், குழந்தைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு தாய் தந்தையர்கள் சண்டை போடாதீர்கள் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு தம்பி ராமையா பரிசுகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours