80களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய பட நிறுவனங்களில் ஒன்று ‘ஹேம் நாக் ஃபிலிம்ஸ்’. ரஜினியின் ‘காளி’, ‘கர்ஜனை’, தியாகராஜன் நடித்த ‘முரட்டுக் கரங்கள்’ உட்படப் பல படங்களைத் தயாரித்த ஹேம்நாக் பாபுஜி, உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 76. இங்கே அவரது நினைவுகளைப் பகிர்கிறார் நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன்.
“பாபு சார், அவரது சகோதர்கள் எல்லாரும் ஆரம்பகாலங்கள்ல வீடியோ லைப்ரரி வச்சிருந்தாங்க. பல படங்களுக்கு ஃபைனான்ஸியர்களாக இருந்திருக்காங்க. அதன்பின் பட விநியோகத்துல இறங்கினாங்க. அப்படியே தயாரிப்பாளராகவும் ஆனாங்க. யாருக்காவது பணத்தேவைன்னா உடனே வந்து உதவுவாங்க. ரஜினி நடித்த ‘காளி’, ‘கர்ஜனை’ படங்களை அவர் தயாரிக்கறப்ப, அந்தப் படங்களின் கம்போஸிங்கின் போது என்னையும் அழைச்சிட்டுப் போயிருக்கார். அவரோடு தொடர்பில்தான் இருந்தேன். எதாவது விஷயம்னா பகிர்ந்துக்குவோம். ஃபைனான்ஸ், விநியோகம், தயாரிப்புன்னு எல்லாமும் தெரிஞ்சவர்.
பாபுஜி சார் தயாரிப்பில் ‘முரட்டுக் கரங்கள்’ படத்தில் நடிச்சிருந்தேன். அருமையான மனிதர். அந்தப் படப்பிடிப்பு மைசூர் பக்கத்துல காட்டுப்பகுதிகள்ல நடந்தது. படப்பிடிப்பு தளத்துக்கு வருவார். ‘எல்லாரும் சாப்பிட்டாங்களா?’னு அக்கறையா விசாரிப்பார். ‘சாப்பாடு நல்லா இருந்ததா?’னு கேட்பார். யூனிட்ல இருக்கறவங்களுக்கு ஸ்பெஷல் சாப்பட்டு வரவைத்து, சாப்பிட வைப்பார். அப்படி ஒரு அன்பானவரை இழந்திருக்கோம்” என்கிறார் தியாகராஜன்.
+ There are no comments
Add yours