பிரபல மலையாள நடிகையான சம்யுக்தா, தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற வாத்தி திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் பேசிய நடிகை சம்யுக்தா, தன் பெயருக்குப் பின்னால் இருக்கும் ‘மேனன்’ எனும் சாதி அடையாளத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் தனக்கு விரும்பவில்லை என்றும் தயவு செய்து தன்னை ‘மேனன்’ என்று யாரும் சாதியை வைத்து அடையாளப்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள அவர், ” நான் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பெண். எனக்குத் தமிழ் தெளிவாகப் பேச வரும். தமிழ்ப் படங்களில் எனக்கு நடிக்க ஆசை இருந்தாலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சில வாய்ப்புகளை நானே மறுத்துள்ளேன். தனுஷ் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதெல்லாம் நடந்தது போல் எனக்குத் தோன்றுகிறது. இத்திரைப்படத்தில் அரசுப் பள்ளி உயிரியல் ஆசிரியராக நடித்திருக்கிறேன். கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் திரைப்படமாக இந்த படம் அமைந்திருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு வரை தான் நான் படித்துள்ளேன். அதற்குப் பிறகு சினிமாவிற்கு வந்து விட்டேன். அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். அதேசமயம், இதைத்தான் படிக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது” என்று கூறினார்.
+ There are no comments
Add yours