வீட்டை விட்டு நெகிழ்ச்சியோடு வெளியேறிய ரச்சிதா
கமல் எவிக்ஷன் கவரை பிரித்துப் பார்த்த போது காலியாக இருந்ததால் ‘ஹைய்யா.. எவிக்ஷன் இல்லை போல” என்று அனைவரும் ஆரவாரம் செய்ய, “இருங்க. இருங்க. கவர் அந்தப் பொட்டில இருக்கு” என்று ஜெர்க் தந்தார் கமல். மைனாவும் ரச்சிதாவும் இணைந்து பெட்டியைப் பிரிக்க, பலரும் மைனாதான் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் திடீர் டிவிஸ்ட்டாக ரச்சிதாவின் பெயர் இருந்தது. மைனா கூட அத்தனை கலங்கவில்லை. ஆனால் ஷிவின் அப்படி அழுது தீர்த்தார். ரச்சிதாவிற்கும் அதிர்ச்சிதான் என்றாலும் உடனே சுதாரித்துக் கொண்டார்.
ரச்சிதா விடைபெறும் நிகழ்வு மிக உணர்ச்சிகரமாக இருந்தது. இந்த வீட்டை அவர் ஆத்மார்த்தமாக நேசித்திருக்கிறார் என்பது அவரது கண்ணீரிலும் உடல்மொழியிலும் உண்மையாக பிரதிபலித்தது. “இந்த வீட்ல நான் செக்யூர்டா ஃபீல் பண்ணியிருக்கேன்” என்று ரச்சிதா சொன்னதற்காக, சக ஆண் போட்டியாளர்களை கமல் ஏற்கெனவே பாராட்டியிருந்தார். (ராபர்ட் மாஸ்டரும் இதில் வருவாரா?!).
இந்தச் சமயத்தில் அசிமிடம் ரச்சிதா நிகழ்த்திய ஒரு உரையாடல் இருக்கிறதே?! மிக முக்கியமான தருணமாக அது அமைந்தது. ஆனால் என்னவொரு குறை என்றால் இதை அவர் முன்பே அசிமிடம் நிகழ்த்தியிருக்கலாம். அச்சப்படாமல் சொல்லியிருக்கலாம். “அசிம். நான் நடிக்கறேன்றதை நீங்க தொடர்ந்து சொல்லியிருக்கீங்க. நீங்க சீரியல் காலத்துல பார்த்த ரச்சிதா வேற. அதுக்கப்புறம் நெறைய வருஷம் போயிடுச்சு. நான் வேற மாதிரி மாதிரியிருக்கேன். இந்த வீட்ல நான் உண்மையா வாழ்ந்திருக்கேன். என் வீட்ல கூட இப்படி இருந்ததில்ல. இங்க ரொம்ப நேர்மையா இருந்திருக்கேன். ஆனா எனக்குத் தகுதியில்லன்னு சொன்னீங்க. அ்பபடி கிடையாது. நான் மத்தவங்க கிட்ட கூட தள்ளித்தான் பழகுவேன். ஆனா இங்க கிடைச்ச பெரிய பரிசு ஷிவின்தான். யார் கிட்டயும் நான் இத்தனை அட்டாச் ஆனதில்லை” என்று சொல்ல அசிமின் முகத்தில் இறுக்கம். ரச்சிதாவின் தோளில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதார் ஷிவின். ‘பிக்கி’யின் விர்ச்சுவல் ஹக்கை பெற்றுக் கொண்ட ரச்சிதா, மிக நெகிழ்ச்சியுடன் விடைபெற்றுக் கொண்டார்.
+ There are no comments
Add yours