கடவுள்களைக் கொல்லும் கோரிடம் இருந்து தன்னையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் எப்படிக் காக்கிறார் தோர் என்பதுதான் இந்த தோர்: லவ் & தண்டர்.
தன் குழந்தையைத் தக்க நேரத்தில் காக்க மறுத்த கடவுள்கள் இனி ஒரு கணமும் இருக்கத்தேவையில்லை என்னும் முடிவுடன் கத்தியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார் கோர் என்னும் தி காட் புட்ச்சர்.
இன்னொரு பக்கம், தன் வாழ்க்கை எதைநோக்கிப் போகிறது என்னும் குழப்பத்தில் இருக்கிறார் தோர். கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி குழுவிடமிருந்து விடைபெற்றுக்கொள்ளும் தோர், தன் அஸ்கார்டியன் மக்களைப் பாதுகாக்க புது இல்லம் நோக்கி விரைகிறார். ஆனால், அங்கு அவருக்கு முன்பே அவரின் முன்னாள் காதலி (ஜேன் ஃபாஸ்டர்) இன்னொரு தோரும் வந்துவிடுகிறார். தோர் அவரிடம் கொஞ்சம் ரிலாக்ஸாகப் பேசிக்கொண்டிருக்க, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அஸ்கார்டியனில் இருக்கும் குழந்தைகளைக் கைப்பற்றி விடுகிறார் கோர். கோரிடம் இருந்து குழந்தைகளை இரண்டு தோர்களும் எப்படி மீட்டார்கள் என்பதற்கான விடையுடனும் அடுத்த பாகத்துக்கான லீடுனடனும் முடிந்திருக்கிறது இந்த ‘தோர்: லவ் & தண்டர்’.
தோராக கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். அயர்ன்மேன் என்றால், இனி என்றென்றும் ராபர்ட் டௌனி ஜூனியர்தான் என்பது போல இனி தோர் என்றென்றும் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தான் என்பதாக அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். புதிய தோராக, தோரின் காதலி டாக்டர் ஜேன் ஃபாஸ்டராக நடாலி போர்ட்மேன். கடந்த பாகத்தில் நடிக்காமலிருந்ததற்கும் சேர்த்து இந்தப் பாகத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். பெண்ணிய வசனங்களாகட்டும், எதிரிகளைப் பந்தாடுவதாகட்டும், இந்தப் படத்தில் கொட்டிக்கிடக்கும் காமெடிகளுக்கு இடையே கொஞ்சமேனும் எமோஷனலாக ஸ்கோர் செய்து இருப்பது நடாலிதான்.
வில்லன் கோராக கிறிஸ்டியன் பேல். பேட்மேனாக பல நடிகர்கள் வரலாம் போலாம். ஆனால், பேட்மேன் கதாபாத்திரத்தின் மூலம், எல்லா பரிமாணங்களையும், நடிப்பின் உச்சத்தையும் காட்டி மிரட்டியவர் கிறிஸ்டியன் பேல். கோராக, குழந்தைகள் முன் தலையைத் திருகி திகில் கதை சொல்லும் காட்சியாகட்டும், தன் குழந்தைக்காக மன்றாடுவதாகட்டும், பேல் என்னும் நடிப்பு அரக்கனைப் பெரிய திரைகளில் பார்ப்பதென்பதே அலாதியான ஒன்றுதான். என்ன அது பேல்தானா எனக் கண்டுபிடிக்கவே சில நிமிடங்கள் ஆகும் அளவுக்கு மேக் அப்பை படத்தில் பூசி இருக்கிறார்கள்.
சின்ன சின்ன கேமியோக்களில் மேட் டேமன், சாம் நீல், மெல்லிஸா மெக்கர்த்தி, லூக் ஹெம்ஸ்வொர்த் எனப் பல பெரிய பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இத்தனை கேமியோக்கள் இருந்தாலும், ஜ்யூஸ் (Zeus) என்னும் மிகப்பெரும் கடவுளாக ரஸல் க்ரோவைச் சித்திரித்துவிட்டு, அந்த பர்னிச்சரை கோமாளித்தனமாக, ஒன்றுமே இல்லாமல் செய்தது ஏனோ உவப்பாக இல்லை.
தோர் படத்தொடரில் தோர், தோர்: தி டார்க் வேர்ல்டு; தோர்: ரக்னராக் வரிசையில் இது நான்காவது படம். தோர்: ரக்னராக்கை இயக்கிய டைக்கா வைட்டிட்டிதான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்குக் குரல் உதவியும் செய்திருக்கிறார். டைக்கா வைட்டிட்டி இதற்கு முன்பு எழுதி, இயக்கிய படங்களைப் போலவே இதிலும் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தோர் படத்தையே நாடக பாணியில் நடிக்கும் நடிகர்கள், முந்தைய பாகங்களின் முக்கிய காட்சிகளை மாண்டேஜ் ஆக்கியது எனச் சில விஷயங்கள் நாஸ்டால்ஜியாவைக் கிளப்புகின்றன.
ஹெய்ம்டாலின் (Heimdall) மகனாக வரும் ஆக்ஸலுக்கும் பிற குழந்தைகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். “Never meet your heroes” என்று தோர் சொல்லும்போது, அதற்குப் பதிலாக ஆக்ஸல் தோரைப் பார்த்துச் சொல்லும் வசனம் நெகிழ்ச்சி எபிசோடு.
அதே சமயம், பல இடங்களில் காமெடி கொஞ்சம் அதிகமாகவே ஓவர்டோஸாகிவிட்டது. வில்லனை மிரட்டும் காட்சிகள், நாயகி உடனான எமோஷனல் காட்சிகள் என எல்லாவற்றிலும் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் காமெடி மற்ற உணர்ச்சிகளை மொத்தமாய் மழுங்கங்கடித்துவிடுகிறது. சூப்பர் ஹீரோ படம் என்றாலே, காமெடிகளைக் கடந்து அது எழுப்பும் உணர்வுகள்தான் படம் முடிந்த பின்னரும், அந்தக் கதாபாத்திரத்துடன் நம்மை கனெக்ட் செய்ய உதவும். ஆனால், இதில் அப்படியான காட்சிகள் மொத்தமாய் மிஸ்ஸிங். எமோஷனல் காட்சிகளிலும் நடாலி போர்ட்மேன் அளவுக்கோ, கிறிஸ்டியன் பேல் அளவுக்கோ கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துக்கு ஒன்றும் இல்லை என்பதும் ஒரு மிகப்பெரிய சறுக்கல்.
கதையோ எமோஷனோ தேவையில்லை, காமெடி போதும் என்பவர்களுக்கு காமெடிக்கு இந்த தோர் கேரன்ட்டி எனச் சிரித்துக்கொண்டே சொல்கிறது இந்த நான்காவது படம்.
+ There are no comments
Add yours