‘சவால்களை ஆரம்பிக்கலாமா? – சாதாரணமாக முடிந்த ‘Sacrifice Task’
‘மாரி’ பாடலுடன் நாள் 93 விடிந்தது. “சண்டை போட்டுட்டு உடனே பேசறாங்கன்னு சொல்றாங்க.. இங்கனயே கிடக்கோம். பேசித்தானே ஆகணும்?!” என்று காலையிலேயே நியாயமான லாஜிக் பேசினார் அமுது. “24×7 பார்த்தா மக்களுக்குப் புரியுமே.. நாம உடனே பேசறதில்லை. ஒருத்தர் கூட சண்டை வந்தா, ரெண்டு மூணு நாள் வரைக்கும் கூட நான் பேசாம இருப்பேன்.. அமுதவாணன்.. விக்ரமன் .. உங்க ரெண்டு பேரு கூட பிரச்சினை வந்தா நாம.. உக்காந்து பேசறோம். ஸால்வ் பண்ணிக்கறோம். ஆனா சில விஷயங்கள் அப்படி முடியதில்லை” என்று ஆதங்கப்பட்டார் ஏடிகே.
‘ஃபைனலுக்காக எந்த அளவுக்கு நீங்க போகத் தயாரா இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?’ என்று Sacrifice Task-ஐ ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘அய்யோ.. என்ன செய்யச் சொல்லப் போறாங்கன்னு தெரியலையே’ என்று ஒவ்வொருவருக்குள்ளும் பதட்டம் எழுந்தது. ஆனால் இது கடந்த சீசன்களைப் போல பெரிய சவால்களாக இல்லை. பஞ்சாயத்தோ, சர்ச்சையோ எழவில்லை. “தம்பி. அந்த டீ கப்பை நகர்த்தி வை” என்கிற மாதிரி சாதாரணமாக முடிந்து விட்டது. மைனா தனது முடியை சற்று கத்தரித்துக் கொண்டார். உள்ளூற அவர் வருத்தப்பட்டாலும் பார்க்க ‘க்யூட்’டாக இருந்தார். பெண்கள் முடியை இழப்பது அவர்களுக்கு துயரமான விஷயம் என்றாலும் அந்த சென்டிமென்ட்டில் இருந்து வெளியே வர வேண்டும். “யோகி செமயா திட்டுவான்” என்று வருத்தப்பட்டார் மைனா. ‘நல்லா விளையாடு’ என்று சொன்னவரே கணவர்தானே?!
‘என் பெயரை பச்சை குத்தச் சொன்னா என்ன செய்வீங்க?’ என்று கதிரவனிடம் கேட்டு அவரை ஜெர்க் ஆக்கினார் ஷிவின். “அசிமை மொட்டை அடிக்கச் சொன்னா நிச்சயம் மறுத்துடுவான். அவன்தான் அடிக்கடி தலையை வாரிட்டு இருக்கான்” என்று கிண்டலடித்தார் ஏடிகே. இரண்டாவது சவால் அசிமிற்கு. பெரிதாக ஒன்றுமில்லை. லுங்கி, பனியன் அணிந்து வீட்டிற்குள் உலாத்த வேண்டும். வீட்டின் வாசலில் கிடக்கும் பால் பாக்கெட்டை எடுக்க வந்த ‘அங்கிள்’ மாதிரியாக உருமாறினார் அசிம். “நல்லாத்தான் இருக்குல்ல.. நல்லாத்தான் இருக்கு’ என்று பிறகு ஆறுதல் அடைந்தார். “வீட்ல இயல்பா உலாத்தற ஆணைப் பார்க்கற மாதிரி இருக்கு’ என்று ஷிவின் சொன்னது ஒரு நல்ல கமெண்ட்.
மூன்றாவது சவால் விக்ரமனுக்கு. கை, கால்களில் உள்ள முடிகளை ‘வேக்ஸ்’ செய்ய வேண்டுமாம். பதிலாக தாடியை எடுக்கச் சொல்லியிருக்கலாம். அதைச் செய்ய முன்வந்த மைனா, வலியால் அலறிய விக்ரமனிடம் “இப்பத் தெரியுதா. பெண்களோட வலி” என்று கேட்டார். கூட அமர்ந்திருந்த அமுதவாணனின் இம்சைகளை தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருந்தார் விக்ரமன். “இதை எனக்கு கொடுத்திருக்கலாம்” என்று அனத்தினார் பால் பாக்கெட் அங்கிள்.
+ There are no comments
Add yours