கோவை:
கோவை அருகே பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை மார்க்கெட் சர்ச் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன் சகாயராணி தம்பதி. இவர்களின் மகள் சவுமியா, குனியமுத்தூரில் உள்ள நிர்மலா மாதா மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாள் பள்ளிக்கு சென்ற அந்த மாணவி வகுப்பறையில் வைத்து காலை 11.30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவியை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான சங்கீதா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவிக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்கள் மருத்துவர்களிடம் விசாரித்தபோது மாணவி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து சில மணிநேரத்திலேயே மாணவி சவுமியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிறுமிக்கு இம்மருத்துவமனையில் சரியான சிகிச்சை கொடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியதுடன், குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பது குறித்து தகவல் அளித்திருந்தால் வேறு பெரிய மருத்துவமனைக்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ அழைத்துச் சென்று பாதுகாத்து இருப்போம் எனவும் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வழக்குப் பதிவு செய்ததுடன், மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வுக்கு பின் கிடைக்கும் தகவல் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். பள்ளிகள் திறந்து முதல்நாள் வகுப்பறைக்கு சென்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெற்றோர் மற்றும் சக மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
– Dayana Rosilin
+ There are no comments
Add yours