ஜோ பேபி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற `தி கிரேட் இண்டியன் கிச்சன்’ (The Great Indian Kitchen) திரைப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். மலையாள மூலமானது பார்வையாளர்கள் மீது செலுத்திய தாக்கமும், சமூகத்தில் ஏற்படுத்திய விவாதங்களும் தமிழிலும் நிகழ்ந்ததா?
நடன ஆசிரியரான ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் பள்ளி ஆசிரியரான ராகுல் ரவீந்திரனுக்கும் திருமணம் நடக்கிறது. சமையல், பழக்கவழக்கம் என எல்லாவற்றிலும் பழைமையைச் சுமந்துகொண்டிருக்கும் ராகுல் ரவீந்திரனின் வீட்டுக்குத் தன் திருமண வாழ்கையை வாழ வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். வந்த நாள் முதல் காலையில் எழுந்து கணவருக்கும், மாமனாருக்கும் சமைப்பது, பரிமாறுவது, சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்வது, பாத்திரங்களைக் கழுவுவது என இயந்திரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார். அன்றாட வாழ்வில் அவர் அனுபவிக்கும் ஆணாதிக்கக் கொடுமைகளையும், அதிலிருந்து விடுபட அவர் எடுக்கும் இறுதி முடிவையும், இந்தியக் குடும்ப அமைப்பின் மீதான சம்மட்டி அடிகளாகக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர்.
ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு படத்துக்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது. ஆற்றாமை, அருவருப்பு, அவமானம், அழுகை எனத் தொடங்கி இறுதியில் வெடித்து எழும் இடம்வரை, படத்துக்கான மொத்த பொறுப்பையும் கையில் எடுத்துச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆனால், அவரைத் தவிரப் பிற கலைஞர்கள் யாவரும் ‘ஆக்ஷன்’, ‘கட்’டுக்கு இடையில் மட்டுமே நடிப்பவர்களாகத் திரையில் தோன்றியிருக்கிறார்கள். குறிப்பாக, கணவராக வரும் ராகுல் ரவீந்திரன் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். அதிலும் கோபப்படும் இடங்களில், இன்னமும் கூடக் கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
`நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் ஆகாதும்மா’, `சாதத்த விறகு அடுப்புல வைம்மா’, `துணிய கைல துவைமா’ என மாமனாராக வரும் போஸ்டர் நந்தகுமார், சதா நேரமும் ஐஸ்வர்யா ராஜேஷைத் தொல்லைச் செய்துகொண்டிருக்கிறார். அவ்வகையில், தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். உறவினராக வரும் கலைராணியின் மிகைநடிப்பு, ஓவர்டோஸிலும் ஓவர்டோஸ்! அதேபோல், யோகி பாபுவுக்கான காட்சிகளும் படத்திலிருந்து நம்மை விலக வைக்கிறது.
முதற்பாதியில், ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்து, காய்கறி வெட்டுவது, சமைப்பது, பரிமாறுவது, பாத்திரங்கள் மற்றும் எச்சில் தட்டைக் கழுவுவது, சமையலறை சின்க்கைச் சுத்தம் செய்வது, வீட்டைச் சுத்தம் செய்வது, துணித் துவைப்பது எனத் தினசரி வீட்டு வேலைகளையும் ஆண்களுக்கான பணிவிடைகளையும் திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருக்கிறார். இந்த அன்றாடங்களினால் ஏற்படும் சலிப்பும், கோபமும், நிதானமான காட்சிகளின் வழியாகவும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பின் வழியாகவும் நமக்குக் கடத்தப்படுகின்றன. ஒருகட்டத்தில் காய்கறி நறுக்கும் சத்தமும், சின்க் ஒழுகும் சத்தமும் நமக்குமே எரிச்சலைத் தருகிறது. இந்த எரிச்சலும் அவசரமில்லாத திரைக்கதையும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தோடும் கதையின் மையக்கருவோடும் நம்மை ஒன்ற வைக்கிறது.
வெறும் பாத்திரங்களோடும் உணவுகளோடும் மட்டுமே சமையற்கட்டில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் தனிமையைப் போக்க பால் ஊற்றவரும் சிறுமியிடம், ‘கொஞ்சம் நேரம் இருந்து பேசிட்டுப் போயேன்’ என கேட்கும் இடம் பரிதாப நிதர்சனம். மலையாளத்திலிருந்து பெரும்பாலான காட்சிகளை மாற்றாமல், கமெர்ஷியலாகக் காட்சிகள் சேர்க்கிறேன் என்றெல்லாம் யோசிக்காமல், அதே வீரியத்தோடு ரீமேக் செய்ய நினைத்த இயக்குநருக்குப் பாராட்டுகள்.
ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதையில் இருக்க வேண்டிய நிதானம் மறைந்து போய், காட்சிகள் அழுத்தமில்லாமல் வேகவேகமாக ஓடிவிடுகின்றன. சபரிமலை பெண்கள் நுழைவு விவகாரம், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வரும் பணி நியமன ஆணைக்கு வரும் எதிர்ப்பு என ஒருவிதத் தொடர்ச்சியின்றி காட்சிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வேகத்தால், இரண்டாம் பாதியில் வரும் பிரச்னைகளோடு ஒன்ற முடியாமல் போகிறது. இதனாலேயே, இறுதிக்காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் செய்யும் அந்தச் செயல், எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சம்பிரதாயமாக முடிந்துபோகிறது.
“திருமணத்தால் கட்டமைக்கப்படும் ஒரு குடும்பத்துக்குத் தந்தைதான் குடும்பத் தலைவர், அம்மா வீட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் அழகு” என ஆசிரியரான ராகுல் பாடம் நடத்தும்போது, “ஏன் சார் ரெண்டு பேருமே குடும்பத் தலைவரா இருக்கக் கூடாதா?” என மாணவிகள் கேட்கும் இடம், “அவருக்குக் காரம் பிடிக்கும். இவருக்குக் காரம் பிடிக்காது. அப்ப உங்களுக்கு அத்தை?” என ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்கும் இடம் போன்றவை ஆணாதிக்க சமூகத்தை நோக்கி எழுப்பப்படும் சிறப்பான கேள்விகள். ஆனால், அதற்கு வரும் கைதட்டு, வசனத்துக்காக மட்டுமே வந்ததோ என்று யோசிக்க வைக்கிறது. காரணம், மேக்கிங்கில் அநியாயத்துக்கு இழையோடும் அந்தச் செயற்கைத்தனம்!
ஒரு வீட்டைச் சுற்றியே படம் சுழன்றாலும், அலுப்புத்தட்டாத வகையில் அழகான ஃப்ரேம்களால் தன் பணியை நிறைவாகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். படத்தொகுப்பில் லியோ ஜான் பாலும், பின்னணி இசையில் ஜெர்ரி சில்வஸ்டர் வின்சன்ட்டும் கைகொடுத்திருக்கிறார்கள். காய்கறி நறுக்குவது, சமைப்பது, சின்க் ஒழுகுவது என எந்நேரமும் `ஒலி’த்துக்கொண்டிருக்கும் படத்துக்கு ஒலிப்பதிவும் பெரும்பலம் சேர்த்திருக்கிறது.
நடிகர்களிடம் இன்னும் சிறந்ததொரு நடிப்பை வாங்கி, அவசர கதி மேக்கிங்கைத் தவிர்த்து, நின்று, நிதானமாகக் கதையைச் சொல்லியிருந்தால், ஒரிஜினலின் மணமும், காரமும் இந்த கிச்சனிலும் கமகமத்திருக்கும்.
+ There are no comments
Add yours