திருமண வீட்டில் மது விருந்து ; குடித்துவிட்டு தண்டவாளத்தில் உறங்கிய நண்பர்கள் பலி..!

Estimated read time 1 min read

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் திருமண வீட்டில் மது அருந்திவிட்டு ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்த 2 பேர் சரக்கு ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அடுத்துள்ள பிஎன்டி காலனியில் நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மது விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தியிருக்கிறார்கள். அதில், மதுபோதையில் மயக்கமடைந்த மாரிமுத்து, மற்றொரு மாரிமுத்து மற்றும் ஜெபசிங் ஆகிய மூன்று பேரும் வீட்டிற்கு அருகே இருந்த ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியிருக்கிறார்கள்.

அப்போது அதிகாலை 3 மணி அளவில் சரக்கு ரயில் வந்துள்ளது. இதில் ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ரயில் ஏறி இறங்கியதில் மாரிமுத்து தலை துண்டாகியும், மற்றொரு மாரிமுத்து உடல் நசுங்கியும் பலியானார்கள். இதில் பணக்குடியைச் சேர்ந்த ஜெபசிங் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். உடனடியாக அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த ரயில்வே போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காயமடைந்த ஜெபசிங் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.‌

                                                                                                                               – Gowtham Natarajan

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours