பதான் பட வெற்றி குறித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட ஷாருக்கான், படத்தை ஆதரித்த பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், கொரோனா சூழலில் தன் முந்தைய படத்தின் தோல்வி, தீபிகா உடனான கெமிஸ்ட்ரி என பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட்டில் பலகட்ட பிரச்னைகளைத் தாண்டி ஜனவரி 25ஆம் தேதி வெளியான ஷாருக்கின் பதான் படம் இந்திய சினிமா வரலாற்றில் பல பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்ட்களை அடித்து நொறுக்கி சாதனை புரிந்து வருகிறது.

’ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்யவில்லை’

அந்த வகையில் வெளியான ஐந்தே நாள்களில் உலகம் முழுவதும் மொத்தம் 543 கோடி ரூபாய் வசூலித்து ஒட்டுமொத்த பாலிவுட் உலகையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது பதான். இந்தியாவில் மட்டும் மொத்தம் பதான் படம் 335 கோடி வசூலித்துள்ள நிலையில், ஷாருக்கான் தான் பாலிவுட்டின் வசூல் மன்னன் என்பதை அழுத்தமாக இப்படத்தின் மூலம் வசூலித்துள்ளார் எனக் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

இந்நிலையில், முன்னதாக பதான் வெற்றி குறித்தும் நன்றி தெரிவிக்கும்விதமாகவும் முன்னதாக ஷாருக் கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஷாருக், கோவிட் காலத்தின்போது நான் 1/2 ஆண்டுகள் வேலை செய்யவில்லை. ஆனால் எனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் என்னால் நேரத்தை செலவிட முடிந்தது. என் குழந்தைகள் – ஆர்யன் மற்றும் சுஹானா – வளர்வதை என்னால் பார்க்க முடிந்தது.

என்னுடைய கடைசி படம் சரியாக ஓடாதபோது நான் மாற்றுத் தொழிலைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். சமைக்கக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன், ரெட் சில்லிஸ் ஈட்டரி என்ற உணவகத்தைத் தொடங்க நினைத்தேன்” எனக் கூறினார்.

’தீபிகாவின் கையை முத்தமிடுவேன்’

தொடர்ந்து தீபிகாவுடனான கெமிஸ்ட்ரி குறித்து பதிலளித்த ஷாருக், “எனக்கும் தீபிகாவுக்கும் காதலிப்பதற்கும் கட்டிப்பிடிப்பதற்கும் முத்தமிடுவதற்கும் ஒரு சாக்கு மட்டுமே தேவை என்பது உங்களுக்குத் தெரியும். எனவே நீங்கள் என்னிடம் எந்தக் கேள்வி கேட்டாலும், தீபிகா படுகோனின் கையை முத்தமிடுவேன். அதுதான் பதில்” என்றார்.

பதான் பட வெற்றி பற்றி பேசிய ஷாருக் கான், “நாம் செய்யும் செயல் வேலைக்கு ஆகாதபோது நம்மை நேசிப்பவர்களிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள், எனக்கு அன்பைக் கொடுக்கும் லட்சக்கணக்கானவர்கள் இருப்பது என் அதிர்ஷ்டம். நான் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் என் பால்கனிக்கு வருவேன், நான் சோகமாக இருக்கும்போதும் என் பால்கனிக்கு வருவேன்.

நன்றியுள்ளவனாக இருப்பேன்

மக்களை அழைத்து எங்கள் படத்தை நிம்மதியாக வெளியிட அனுமதிக்குமாறு கேட்க வேண்டிய நிலமை முன்னதாக இருந்தது. திரைப்படம் பார்ப்பதும், படம் எடுப்பதும் காதலில் திளைக்கும் அனுபவம் போன்றது, பதான் படத்தை மக்களுக்காக வெளியிட எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

நாங்கள் மகிழ்ச்சியாக படம் வெளியிடுவதை தடுக்கக்கூடிய விஷயங்கள் இருந்தபோதிலும் எங்கள் படத்தை ஆதரித்த பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நாங்கள் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

+ There are no comments
Add yours