பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது.
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார்.
இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்.
தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார்.
நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours