படத்துக்குப் படம், கதைத் தேர்விலும், நடிப்பிலும் மெரூகேறிக்கொண்டே இருக்கிறார் கார்த்தி. `விருமன்’, `சர்தார்’, `பொன்னியின் செல்வன்’ படங்களை அடுத்து இப்போது ராஜூமுருகன் இயக்கத்தில் `ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் நலன்குமாரசாமி, பிரேம்குமார் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கிறார். கார்த்தியின் அட்டகாசமான லைன்அப்கள் குறித்தும், `ஜப்பான்’ படம் குறித்தும் விசாரித்தேன்.
கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ராஜூமுருகன் இயக்கி வரும் இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். அவருடன் தெலுங்கு நடிகர் சுனில், விஜய் மில்டன் உட்படப் பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவு ‘பொன்னியின் செல்வன்’ புகழ் ரவிவர்மன், இசை ஜி.வி.பிரகாஷ்குமார்.
சென்னை, கேரளாவைத் தொடர்ந்து மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. சென்ற டிசம்பரில் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்த கார்த்திக்கு இடையில் பிரேக் அமைந்ததால், குடும்பத்தினருடன் ஸ்பெயின் சென்று வந்தார். ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ எனத் தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டதால் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனது. இந்நிலையில் கடந்த புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடும் சந்தர்ப்பம் அமைந்ததால் ஸ்பெயின் சென்று திரும்பினார்.
‘ஜப்பான்’ குழு இப்போது பிரேக்கில் இருக்கிறார்கள். பிப்ரவரி முதல் வாரத்தில் மீண்டும் கேரளாவில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதனையடுத்து அடுத்த மாதமே நலன்குமாரசாமியின் படத்துக்கான பூஜை தொடங்குகிறது. இதை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ஆனால், இதன் படப்பிடிப்பு தேதிகள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
இதனையடுத்து ’96’ பிரேம்குமாரின் படப்பிடிப்பும் ஆரம்பிக்கவிருக்கிறது. ‘விருமன்’ படத்தைத் தொடர்ந்து, சூர்யாவின் ‘2டி’ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. அதே சமயம், இந்தப் படத்துக்கு ‘ஜல்லிக்கட்டு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலில் உண்மையில்லை என்கிறார்கள்.
’96’ படத்தில் ரம்மியமான காதலைச் சொன்ன பிரேம்குமார், இந்தப் படத்தில் குடும்ப உறவுகளின் உன்னதத்தைச் சொல்லவிருக்கிறார். அதில் சில காட்சிகளில் ஜல்லிக்கட்டு வருகிறது என்றும், மற்றபடி இது ஜல்லிக்கட்டு குறித்த கதை இல்லை என்றும் தகவல். இந்தப் படத்துக்கு டைட்டில் இன்னமும் வைக்கப்படவில்லை. நலன், பிரேம் இருவருமே ப்ரீ-புரொடக்ஷன் வேலைகளைத் தொடங்கிவிட்டனர் என்கிறார்கள்.
+ There are no comments
Add yours