சென்னை: யோகி பாபுவை இயக்கும் ஆசை தனக்கும் உள்ளது என்றும் அது நிச்சயம் நிறைவேறும் என்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. சுபத்ரா, ஹரி, ஜி.என்.குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யோகிபாபு மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார். பொம்மை நாயகி படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் மாரி செல்வராஜ், யோகி பாபு, ரஞ்ஜித் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய மாரி செல்வராஜ், ”சில திரைக்கதைகளை எழுதும்போதே நமக்கு தெரிந்துவிடும் இதற்கு நடிகர்கள் மட்டுமல்ல மனிதர்களும் தேவை என்று.
அந்த வகையில் நமது உணர்வுகள், அரசியல் என அனைத்தையும் புரிந்து கொண்டு, அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் மனிதர்கள் யார் என்பதை கண்டறிந்து இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. நீலம் தயாரிப்பில் படம் இயக்கியவர்கள் தவறான படங்களில் பயணிக்க முடியாது. பிற்போக்குத்தனமான படங்களை எடுத்துவிட முடியாது. தமிழ்ச் சமூகத்தை பின்நோக்கி இழுக்கும் படங்களை நான் எடுக்க முடியாததற்குக் காரணம் நீலம் தயாரிப்பில் படம் இயக்கியதுதான். இதுவே எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்.
நிறைய இளம் இயக்குனர்களுக்கு மானுடம் தொடர்பான கதைகளை பண்ணும்போது இதனை தயாரிப்பாளர்கள் ஏற்று கொள்வார்களா? என்ற சந்தேகம் உள்ளபோது நீலம் போன்ற தயாரிப்பு நிறுவனம் இதனை ஏற்று கொள்ளும் என்று நினைவுக்கு வருவதே தமிழ் சினிமாவின் வெற்றிதான். இதனை நிகழ்த்தி கொண்டிருக்கும் ரஞ்ஜித்திற்கும், நீலம் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. நிச்சயமாக பொம்மை நாயகி அலையை உருவாக்கும். எளியவர்களின் முகத்தை பிரதிபலிப்பதுதான் யோகி பாபுவின் முகம். அவரை வைத்து படம் எடுக்க அனைத்து நல்ல இயக்குனர்களும் விரும்புவார்கள். அந்த ஆசை எனக்கும் உள்ளது. நிச்சயம் இது நிறைவேறும்” என்றார்.
+ There are no comments
Add yours