பிரதமர் மோடி அறிவித்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களில் சுமார் 2 கோடி பேர் அதனை பயன்படுத்துவதில்லை என்பது தெரியவந்துள்ளது. சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் இலவச இணைப்பு பெற்ற சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான ஏழைகள் ஒருமுறை கூட சிலிண்டர் வாங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் 2016ம் ஆண்டில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நாடு முழுவதும் 8 கோடி குடும்பங்களுக்கு இலவச எல்.பி.ஜி. இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இதன் 2.0 திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை ஹெச்.பி.சி.எல். நிறுவனம் 2 கோடியே 40 லட்சம் குடும்பங்களுக்கும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 4 கோடியே 24 லட்சம் குடும்பங்களுக்கும், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 2 கோடியே 35 லட்சம் நிறுவனங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளன. மொத்தமாக 8 கோடியே 99 லட்சம் பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலவச இணைப்பு பெற்றவர்களில் 90 லட்சத்து 6 ஆயிரம் பேர் திரும்ப ஒருமுறை கூட சிலிண்டர் வாங்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இலவச இணைப்பு பெற்ற சுமார் 9 கோடி பேரில், 1 கோடியே 8 ஆயிரம் பேர் ஒருமுறை மட்டுமே மீண்டும் சிலிண்டர் நிரப்பியுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் சுமார் 2 கோடி பேர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெற்ற இலவச சிலிண்டரை பயன்படுத்துவதில்லை என்பது தெரியவந்துள்ளது. ஏழை, எளிய மக்கள் காசு கொடுத்து சிலிண்டர் நிரப்ப முடியாத அளவிற்கு விலை உயர்ந்திருப்பது இதற்கு காரணம் என்பது உஜ்வாலா திட்ட பயனாளிகளின் கூற்றாக உள்ளது.
+ There are no comments
Add yours