பாலகுமாரனின் சினிமாப் பிரவேசம் நிகழ்ந்த படம்
ஜே.கே.பி தன்னிடம் காதலைச் சொல்வதால், “ஒரு இசை ரசிகையை நீங்க பயன்படுத்திக்கப் பார்க்கறீங்க” என்று கோபித்துக் கொள்ளும் சிந்து, ஒரு வார இடைவெளிக்குப் பின், தனக்குள்ளும் அந்தக் காதல் இருப்பதை உணர்ந்து வாக்குமூலமாகச் சொல்லும் காட்சி சிறப்பானது. இந்த இடைவெளியை, வார இதழ்களின் மூலமாகச் சொல்லியிருப்பதில் பாலசந்தரின் முத்திரையை உணர முடிகிறது. ஜே.கே.பி-யின் மீது தற்காலிக கோபத்திலிருந்தாலும், அவரது போஸ்டரின் மீது ஒருவர்க் கால் வைத்து நிற்பதைப் பார்த்து மனம் தாளாமல் அதை வாங்கி எடுத்து மடித்து வைக்கிறாள் சிந்து. அவளது அகத்தினுள் ஜே.கே.பி இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் நுட்பமான காட்சி இது. சிந்துவை ஒருதலையாகக் காதலிக்கும் அப்பாவியான பாத்திரத்தில் பிரதாப் போத்தனின் நடிப்பும் சிறப்பு.
இந்தப் படத்தின் இணை இயக்குநர் ‘சுரேஷ் கிருஷ்ணா’. வஸந்த் உதவி இயக்குநர். இந்தப் படத்தின் மூலம்தான் ஒரு முக்கியமான எழுத்தாளரின் சினிமாப் பிரவேசம் நிகழ்ந்தது. அது பாலகுமாரன். ஒரு டிராக்டர் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே பிரபலமான எழுத்தாளராக மாறிய பாலகுமாரன், சினிமாவில் நுழைவதா, வேண்டாமா என்கிற மனத்தத்தளிப்பில் இருந்து விலகி, ஒரு சரியான முடிவை எடுத்து பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இணைந்து பணியாற்றத் தொடங்கிய முதல் திரைப்படம் ‘சிந்து பைரவி’. இது சார்ந்த அனுபவங்களை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்று ஒரு தொடராகவே அவர் எழுதினார். சினிமாவில் நுழைய ஆசைப்படும் இளைஞர்களுக்கு, அந்தக் கட்டுரைத் தொடர் ஒரு பாடம் எனலாம். இன்னொரு வகையில் ‘சிந்து பைரவி’யை பாலகுமாரனின் சொந்த வாழ்க்கையோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒருவகையில் அவரும் ஒரு ‘ஜே.கே.பி’தான். தன் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாகவே பதிவு செய்து வைத்திருக்கிறார் பாலகுமாரன்.
இப்போது ஒரு முக்கியமான விஷயத்திற்குள் நுழைவோம். இந்தப் படத்திற்காக, கர்னாடக சங்கீத வாசனை கமகமக்கும் இசையைத் தந்த இளையராஜாதான் ‘சிந்து பைரவியின்’ கூடுதல் சிறப்பிற்கு ஒரு முக்கிய காரணம் எனலாம். அதுவரை எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய பாலசந்தர், இந்தப் படத்தின் மூலம்தான் முதன் முதலாக இளையராஜாவுடன் இணைந்தார். தனது படங்களின் பாடல்கள் வித்தியாசமாக அமைவதில் பாலசந்தர் நிறைய சிரத்தை எடுத்துக் கொள்வார். “பாலு… உன்னோட படத்துக்கு பாடல் எழுதும் போதுதான் எனக்குச் சவாலான சூழல் அமையுது” என்று கண்ணதாசனே இயக்குநரைப் பாராட்டியிருக்கிறார்.
+ There are no comments
Add yours