சென்னை:
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்ரி வெயில் காலம் இன்று தொடங்கும் நிலையில், 3 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் மீது சூரியன் அதிக வெப்பத்தை கொடுக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கி 28ம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் நேற்று பத்து இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக திருத்தணி மற்றும் திருச்சியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரியும், ஈரோடு, கரூர் பரமத்தி, தஞ்சை மற்றும் மதுரையில் 102 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது. சேலத்தில் 101 டிகிரியும், பாளையங்கோட்டையில் 100 டிகிரியும் வெப்பம் பதிவாகி உள்ளது.
வெப்ப நிலை அதிகரித்தாலும், தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours