வியாபாரிகள் தங்களது உரிமைகள், பிரச்சனைகள், வரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசவும், விவாதிக்கவும் ஆண்டு தோறும் மாநாடு நடத்துவர். அதில் தங்களது கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி தமிழக அரசுக்கு கோரிக்கையாக முன்வைப்பர். அதன்படி, இந்தாண்டு திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள் மே 5ம் தேதி திருச்சிக்கு பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் அன்றைய தினம் கோயம்பேடு வணிகர்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக மே 5 ஆம் தேதி கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாக காய், கனி, மலர், உணவு தானியம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளும் இதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக, சென்னை சேப்பாக்கத்தில் கோயம்பேடு வணிக வளாக காய் கனி மலர் உணவு தானிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகரன் மற்றும் பொதுச் செயலாளர் சீனிவாசன், திருச்சியில் நடைபெறும் வணிகர் தின மாநாட்டில் முதல் முறையாக தமிழக முதலமைச்சர் கலந்துகொள்வதாகவும், அதற்கு ஏதுவாக கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும், திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டில், கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக தமிழக முதலமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்க உள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
+ There are no comments
Add yours