இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் சூலூர் விமான தளத்திலிருந்து வெலிங்டன் நோக்கி சென்றபோது விபத்துக்குள்ளானது. 15 பேர் பயணம் செய்த இந்த ராணுவ ஹெலிகாப்டரில் இந்திய தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது நிலை என்னவென்று தெரியவில்லை. இந்திய ராணுவப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நீலகிரி அருகே காட்டேரி என்கிற மலைப்பகுதியில் சிக்கி விபத்துக்குள்ளானது. முக்கிய கூட்டம் ஒன்றிற்காக ராணுவ த்தின் மூத்த உயர் அதிகாரிகள் 15 பேர் சூலூரில் இருந்து பயணம் செய்து வெலிங்டன் நோக்கி சென்றனர்.
வெலிங்க்டனை நோக்கி செல்லும்போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டர் விழுந்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஹெலிகாப்டரில் சென்றவர்கள் தீயில் சிக்கினர். இதில் தற்போது வரை கிடைத்த தகவலின்படி 4 பேர் உடல்கள் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 3 பேர் தீக்காயம் மற்றும் விபத்தினால் ஏற்பட்ட காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதி என்பதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு காவல்துறை, தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர், ராணுவ உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பயணம் செய்துள்ளார்.
அவருடன் அவரது மனைவி மதுலிகா ராவத்தும் பயணித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பயணிகள் பட்டியலிலும் அவர்கள் பெயர் உள்ளது. பிபின் ராவத் பயணம் செய்ததை இந்திய விமானப்படையும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. அவர் பயணம் செய்தாலும் அவரது நிலை என்ன என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. காயத்துடன் மீட்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் தவிர மேலும் பலர் நிலை தெரியாத நிலையில் பயணம் செய்த தலைமை தளபதி நிலை என்னவென்று தெரியவில்லை.
+ There are no comments
Add yours