சேலம்;
எடப்பாடி பழனிசாமி மீதான பழைய பாசத்திலேயே இன்னும் பல அதிகாரிகள் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அவர்களை களையெடுக்கத் தயாராகிவிட்டாராம் அமைச்சர் கே.என்.நேரு. அதிமுக ஆதரவு அதிகாரிகள் யார் யார் என்ற பட்டியல் துறைவாரியாக சேலம் மாவட்டத்தில் ரெடியாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்கிற முறையில் அம்மாவட்டத்தில் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கே.என்.நேரு.
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை தனது சொந்த மாவட்டம் என்பதால் அதிமுகவை தொடர்ந்து அங்கு வலிமையோடு வைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி ஆகச் சிறந்த அனைத்து காரியங்களையும் முன்னெடுத்து வருகிறார். யார் யாரை எப்படி அணுக வேண்டும் என்ற நெளிவுசுளிவுகளை அறிந்து வைத்துள்ள அவர் அதன்படியே அரசுத்துறை அதிகாரிகளையும் கையாள்கிறார். இதனால் பல முக்கிய அதிகாரிகள் இன்னும் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய வட்டத்திற்குள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பழைய நிலை
இந்த தகவலை சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேருவிடம் கடந்த மாதம் புகாராக தெரிவித்தார்கள் உள்ளூர் நிர்வாகிகள் சிலர். அப்போது இது தொடர்பாக பேட்டியளித்த அமைச்சர் நேரு, அதிமுக ஆதரவு போக்கிலிருந்து அதிகாரிகள் திருந்துவார்கள் இல்லையென்றால் திருத்தப்படுவார்கள் எனக் கூறி எச்சரித்திருந்தார். ஆனாலும் சேலத்தில் இன்னும் பழைய நிலையே தொடர்வதாக அமைச்சருக்கு மீண்டும் தகவல் சென்றிருக்கிறது.
விரைவில் தேர்தல்
இதையடுத்து விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்படியே விட்டால் நிலைமை சரியாக இருக்காது எனக் கருதிய அமைச்சர் நேரு, அதிமுக பாசத்துடன் செயல்படும் அரசு அதிகாரிகள் யார் யார் என்ற விவரத்தை சேகரிக்கச் சொல்லியிருக்கிறாராம். அவர்களை அங்கிருந்து மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படுமாம். இதனிடையே தங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கப் போவதை எண்ணி சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரே ஒரு தொகுதி
சேலம் மாவட்டத்தில் பார்த்திபன் எம்.பி., ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகிய இருவரை தவிர வேறு யாரும் திமுக மக்கள் பிரதிநிதிகள் இல்லை. இவர்கள் இருவருமே சற்று மென்மையான போக்கை கடைபிடிக்கக் கூடியவர்கள் என்பதால் இவர்களால் அதிகாரிகளை கண்டிப்புடன் கையாள முடியவில்லையாம். இப்போது அதிரடி அரசியலுக்கு பெயர் பெற்ற அமைச்சர் கே.என்.நேரு மூலம் தாங்கள் நினைப்பதை சாதிக்கத் தொடங்கியுள்ளனர் சேலம் திமுகவினர்.
+ There are no comments
Add yours