திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 23). சமூக வலைதளங்களில் உள்ள இவரது புகைப்படத்தை பயன்படுத்தி ஆரணியை சேர்ந்த பைரோஸ்கான் மகன் பயாஸ் (24) என்பவர் பல பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பணம் பெற்று வந்தள்ளார். சமூக வலைதளங்களில் பாலாஜியின் நண்பர் அதனை பார்த்துவிட்டு அவரிடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தை பயன்படுத்தும் உண்மையான நபர் யார் என விசாரித்தனர். பாலாஜியின் புகைப்படத்தை பயன்படுத்துவது ஆரணி சபாஷ் தெருவைச் சேர்ந்த பயாஸ் என்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் இளம்பெண் போல் பயாஸ் என்பவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஆரணி கோட்டை மைதானத்திற்கு வரவழைத்தனர். இந்நிலையில் ஆரணி பஸ் நிலையம் அருகே பாலாஜி சென்றபோது, எதிரே வந்த பயாசிடம், என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி நீ பல பெண்களிடம் ஏமாற்றி பணம் பறித்து வருவதால், எனக்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது எனக்கூறி, உடனடியாக படத்தை அகற்றிவிடு எனக் கூறியுள்ளார். அப்போது பாலாஜியை பயாஸ் கையால் தாக்கி கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக பாலாஜி ஆரணி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பயாசை செய்து கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆரணி நகர காவல்துறையினர் பயாஸ் செல்போனை சோதனை செய்ததில் 100 க்கும் மேற்பட்ட திருமணம் ஆன பெண்கள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரிடம் குறுஞ்செய்தியில் காதல் வலைவீசி லட்ச கணக்கில் பெண்களிடம் பணம் பறித்துள்ளது விசாரணையில் தெரியவந்தன. இதனையடுத்து பயாஸ் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போளுர் கிளை சிறையில் அடைத்தனர். ஆரணியில் இன்ஸ்டாகிராமில் 100 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலைவீசி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
+ There are no comments
Add yours