Stree 2 Review: குடும்பங்கள் கொண்டாடும் பாலிவுட் பேய்; `ஸ்த்ரீ 2'வில் அப்படி என்னதான் இருக்கிறது?

Estimated read time 1 min read

பேய்ப்படம் பார்க்க தியேட்டருக்குப் போனால் என்ன செய்வீர்கள்? பயந்த சுபாவம் என்றால் கைகளால் முகத்தை மூடி விரலிடுக்கில் படத்தைப் பார்ப்பீர்கள். கொஞ்சம் என்னைப்போலத் தைரியசாலி என்றால் பாப்கார்னையும் நகத்தையும் கடித்துக்கொண்டே படம் பார்ப்பீர்கள். ஆனால், ஒரு பேய்ப்படத்தைப் பார்க்க குடும்பம் குடும்பமாக தியேட்டருக்குப் போய் வயிறு வலிக்கச் சிரித்தே புரையேறியது என்றால் நம்ப முடிகிறதா?

‘ஸ்த்ரீ-2’ தான் அது. இந்திய பேய்ப்பட வரலாற்றில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸான ‘ஸ்த்ரீ-2’ என்ற பாலிவுட் படம் கலெக்‌ஷனில் பல ரெக்கார்டுகளை பிரேக் செய்துள்ளது. வெறும் 50 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இதுவரை 600 கோடிகளை வசூலில் வாரிக்குவித்து ஒட்டுமொத்த பாலிவுட்டையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

Stree 1

`ஸ்த்ரீ-2′ விமர்சனத்தைப் பார்ப்பதற்கு முன் `ஸ்த்ரீ-1′ பற்றி அதைப் பார்க்காதவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். தெரிந்தவர்கள் மாற்றுப்பாதையில் ஒரு பாரா ஸ்கிப் செய்து செல்லவும்!

2018-ல் ரிலீஸான ஸ்த்ரீ-1 அந்த ஆண்டின் ஸ்லீப்பர் ஹிட். `ஃபேமிலி மேன்’, ‘ஃபார்ஸி’, ‘கன்ஸ் அண்ட் குலாப்ஸ்’ வெப் சீரீஸ்களை இயக்கிய ராஜ் & டி.கே இணைதான் முதல் பாகத்தை எழுதியிருந்தார்கள். அமர் கௌஷிக் என்ற அறிமுக இயக்குநர் சிறப்பாக இயக்கியிருந்தார். கர்நாடகத்தின் கிராமியக்கதைகளின் ஒன்றான ‘நாளை வா’ என்ற மரபு சார்ந்த பேய்க்கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. காமெடி ஜானரில் ஒரு பேய்க்கதையைச் சொல்லி பார்வையாளர்களைக்ல் குஷிப்படுத்தியது. அதாவது, வாசிக்கத் தெரிந்த படிப்பறிவு கொண்ட பெண் பேய்தான் முதல் பாகத்தின் நாயகி. ‘ஓ ஸ்த்ரீ… கல் ஆனா!’ (‘ஓ பெண்ணே நாளைக்கு வா!’) என்று தங்கள் வீடுகளில் எழுதி வைத்தால் பேய் அந்த வீட்டைக் கடந்து சென்றுவிடும்.

ஸ்த்ரீ-1-ன் கதை ரொம்பவே சிம்பிள்… மத்திய பிரதேசத்தின் சாந்தேரி நகரத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஆண்கள் நடமாடமாட்டார்கள். ஆண்டுதோறும் 4 நாள்கள் நடக்கும் ஊர்த்திருவிழாவின் இரவுகளில் ஒரு பெண்ணின் ஆவி, ஊருக்குள் வந்து ஆண்களை மட்டும் கடத்திச் செல்வதால்தான் பயம். அதனால் அந்த 4 நாள்களும் ஆண்கள் கூட்டமாகத்தான் இரவில் தூங்குவார்கள். அதையும் மீறி இரவில், ஆவியால் கடத்தப்படும் ஆண்களில் சிலர் மறுநாள் நிர்வாண கோலத்தில் மீட்கப்படுகிறார்கள். அந்த ஊரில் வசிக்கும் விக்கி என்ற இளைஞனும் அவன் நண்பர்களும் சேர்ந்து சம்பவங்களின் பின்னாலிருக்கும் ஆவி யார் எனக் கண்டுபிடிக்கிறார்கள். நாயகன் விக்கி, ஓர் இரவில் தான் சந்தித்து காதல் வயப்பட்ட அமானுஷ்யப் பெண்தான் அந்த ஆவி என ‘சந்தேரி புராணம்’ எனும் புத்தகத்தின் உதவியோடு கண்டுபிடிக்கிறான். ஆவியைக் காதலிக்கும் விக்கி என்ன ஆனான், மனிதர் உணர்ந்து கொள்ள முடியாத இந்த புனிதமான காதலின் விளைவு என்ன, சந்தேரியின் ஆண்கள் ஆவியின் பிடியிலிருந்து தப்பித்தார்களா என்பதற்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.

Stree 2 Review

அண்மையில் ரிலீஸான ஸ்த்ரீ-2-வில் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகக் காட்சி தொடங்குகிறது. ஊரை விட்டுச் சென்ற ஸ்த்ரீ என்ற அந்த ஆவி மீண்டும் சந்தேரி நகரத்துக்குள் வருகிறது. நுழைவாயிலில் ஆவிக்குச் சிலை வைத்து கீழே ‘எங்களைப் பாதுகாத்துக் காப்பாற்று!’ என்று எழுதி வைத்திருப்பதைப் பார்த்து கண்களில் ஜலம் வைத்துக் கொண்டு பிரியா (ஆவி)டை கொடுக்கிறது. ஆனால், ஊருக்குள் ஸ்த்ரீயைவிட பவர்ஃபுல்லான புது ஆவி ‘சர்கட்டா’ நுழைகிறது. இது ஒரு ஆம்பளை ஆவி… ஆவி என்று சொல்வதைவிடப் படுபாவி என்றும் சொல்லலாம். இந்தப் பாவி… ஸாரி ஆவி, ஊருக்குள் இரவு நேரத்தில் நடமாடும் பெண்களை மட்டுமே தூக்குகிறது. ஆடை சுதந்திரம் பேசும், புரட்சி பேசும், மாடர்ன் பெண்கள்தான் இதன் முதல் டார்க்கெட்!

Stree 2 Review

தன் நண்பர்கள் குழாமோடும், ‘ஸ்த்ரீ மாதா’வோடும் இணைந்து எப்படி சர்கட்டாவை வதம் செய்து ஊரைக் காப்பாற்றுகிறான் விக்கி என்பதே மீதிக் கதை. இதில் 3-ம் பாகத்துக்கான லீடும் உண்டு என்பது கூடுதல் தகவல். இது மொத்தமாகவே ஒரு ஹாரர் யுனிவர்ஸின் கீழ் வருகிறது என்பதை உணர்த்தும் விதமாக ‘பேடியா’ படத்தின் வருண் தவானையும் கூட்டி வந்திருக்கின்றனர்.

இவ்வளவு சுமாரான கதையில் இந்தியா முழுக்க குடும்பமாய் கொண்டாட என்ன இருக்கிறது என சப்-டைட்டிலோடு படத்தைப் பார்த்து உணர்ந்தபின் புலப்பட்ட விஷயங்கள் இவை…

இரண்டு பாகத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கும் நடிகர்கள். அதிலும் குறிப்பாக நாயகன் விக்கியாக நடித்திருக்கும் ராஜ்குமார் ராவ் அட போடவைக்கிறார்! காமெடி கலந்த அப்பாவி இளைஞன் பாத்திரமென்றால் அல்வா சாப்பிடுவதுபோல… இதில் ‘இருட்டுக் கடையே’ கிடைத்திருப்பதால் சொல்லவா வேண்டும்? ஆவிதான் தன் காதலி என்பதைத் தெரிந்து கொண்டபின் வரும் ஏமாற்றத்தையும் மீறி கண்களில் காதல் வழிவது சிறப்பான சம்பவம். காதலி தன் உடலுக்குள் புகுந்து கொள்ளும்போது அவர் காட்டும் ரொமான்ஸ் எக்ஸ்பிரஸன் தெய்வ லெவல். அவருக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் நூலகராக வரும் சீனியர் நடிகர் பங்கஜ் திரிபாதி. நண்பர்களாக வரும் அபர்ஷக்தி குரானா, அபிஷேக் பானர்ஜி இருவரும் காமெடி கதகளி ஆடியிருக்கிறார்கள். பாலிவுட்டின் படா பிரபலங்களான அக்‌ஷய் குமார், வருண் தவான், தமன்னா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வந்து போகிறார்கள். அதிலும் அவர்களின் முந்தைய படங்களின் ரெஃபரென்ஸோடு காட்சிகளை வைத்திருந்தது ஸ்பெஷல் அடிப்பொலி. ‘காவாலியா’வை நினைவுபடுத்தும் தமன்னாவின் டான்ஸ் ஸ்பெஷல் ட்ரீட். க்ளைமாக்ஸில் வரும் ஆவிகளின் சண்டைக் காட்சியில் கிராஃபிக்ஸைப் பயன்படுத்திய விதம் கவனிக்க வைக்கிறது.

Stree 2 Review

எளிமையான கதை… அதில் படம் நெடுக விரவிக் கிடக்கும் காமெடி ஒன்லைனர்கள்தான் படத்தின் கூடுதல் பலம். உதாரணமாக தன் ஆவிக் காதலியை வழியனுப்பும் விக்கி, “ஆவிங்க நீங்க என்ன சாப்பிடுவீங்கனு தெரியாது… ஆனா, வேளாவேளைக்கு மறக்காம சாப்பிட்ரு!” என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சொல்லுமிடம், “சர்கட்டா ஒரு இன்ஃப்ளூயன்ஸர்… அதனால ஈஸியா ஃபாலோயர்ஸை இழுத்துடுவான்!”, “அமிதாப் பச்சன் மேல ஆமிர் கானை நிப்பாட்டின அளவுக்கு அவன் உயரம்!” போன்று படம் நெடுக காமெடி ஊசிச் சரவெடி கொளுத்தியிருக்கிறார் எழுத்தாளர் நிரன். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான ஒருவரைப் பற்றிச் சொல்லாவிட்டால் ஆவிக்குத்தம் ஆகிவிடும். ஷ்ரத்தா கபூர்தான் அது. ஸ்த்ரீயின் புத்திரியாக ஆவியாக வருபவர் மிரட்டல் நடிப்பில் நம்மை வசீகரிக்கிறார்.

`படத்தில் நெகட்டிவ் அம்சங்கள் இல்லையா?’ என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.

பேய் படம் என்றாலும் அந்த யுனிவர்ஸுக்குள்ளாகவே லாஜிக் இல்லாத காட்சிகளின் தொகுப்பாக இரண்டரை மணி நேரப் படமும் காதில் பூவைச் சுற்றுகிறது. அதை மறக்க வைக்கும் மேஜிக்காக ஹியூமர் ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. அதேபோல சர்கட்டாவாக வரும் அந்த தலையில்லா முண்டத்தை முதல்முறை பார்க்கும்போது பயமாக இருந்தாலும் போகப்போக கார்ட்டூன் கேரக்டரைப்போல பரிதாபமாக இருக்கிறது.

ஆனாலும், ஆவி சூழ் உலகைக் கொஞ்சம் ரசிக்க… கொஞ்சம் சிரிக்க `ஸ்த்ரீ 2′-வுக்கு சலாம் வைக்கலாம்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours