நேற்றைய தினம் அவரது அப்பாவின் நான்காவது ஆண்டு நினைவு தினம். `நாட்டாமை’ ராமசாமி எனப் போஸ்டர் அடித்து மதுரை திருமங்கலம் சுற்று வட்டாரத்தில் ஒட்டி அசத்தியவர், அவரது ஊர் மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்து கிராம மக்களுக்கும் தன்னால் இயன்ற சில உதவிகளைச் செய்தாராம். ‘அட, நாட்டாமை மகனா நீங்க, சொல்லவே இல்ல’ என்றதும், பேசத் தொடங்கினார்..
”பிரிட்டிஷ்காரங்க காலத்துல கிராமங்களை நிர்வகிக்க முன்சீஃப், கர்ணம்னு நியமிச்சாங்க இல்லையா, அப்படி நியமிக்கப்பட்டவர் எங்க தாத்தா. தாத்தாவுக்குப் பிறகு அப்பா. அப்பா காலத்துலதான் அந்தப் பதவியே நாட்டாமை ஆகிடுச்சு. எங்க ஊரான அரசப்பட்டி மட்டுமில்லாம, அதைச் சுத்தியிருக்கிற 12 கிராமங்கள் அப்பா பேச்சைத் தட்டாது. அந்தக் காலத்துலயே கொஞ்சம் படிச்சவர் ப்ளஸ் ஆளுமை மிக்கவரா இருந்ததால ஊரைக் கட்டுக் கோப்பா வச்சிருந்திருக்கார்.
ஊர்ல அடுத்தவன் காட்டுல ஆடு மாட்டை விட்டு மேய விடறது, கடலையக் களவாடுறது முதலான பஞ்சாயத்துகள்லாம் அப்பாகிட்டத்தான் வரும். அப்ப அப்பா என்ன தீர்ப்பு சொல்வாரோ அதை ரெண்டு தரப்பும் கேட்டுகிட்டு சமாதானமாகிப் போயிடுவாங்களாம். ‘நாட்டாமை, தீர்ப்பை மாத்து’ன்னெல்லாம் யாரும் சொன்னதே இல்லையாம். யாராச்சும் மது அருந்தியிருந்தா அவங்க கூட பேச்சையே நிறுத்திடுவாராம். தன்னுடைய சர்வீஸ்ல பல பஞ்சாயத்துகளைப் பைசல் பண்ணி வச்ச அப்பா ஒரேயொரு விவகாரம் வந்தா மட்டும் தீர்ப்பு சொல்லாமலேயே எஸ்கேப் ஆகிடுவாராம். அதாவது கணவன் மனைவி இடையிலான பிரச்னை வந்தா மட்டும், ‘நாளைக்குப் பஞ்சாயத்துல பேசிக்கலாம்’ சொல்லி அனுப்புவாராம். மறுநாள் ஊர் கண் முழிக்கிறதுக்கு முன்னாடியே அதிகாலையில எழுந்து எங்காவது வெளியூருக்குக் கிளம்பிப் போயிடுவாராம். போயிட்டு ரெண்டு மூணு நாள் கழிச்சே ஊர் திரும்புவாராம். அந்த இடைவெளியில தம்பதியினரிடையே கோபம் குறைஞ்சு சமாதானமாகிப் போகிடுவாங்களாம். அப்படியொரு இடைவெளியை தரணும்னே வெளியூர் கிளம்பிப் போயிடுவாராம்.
+ There are no comments
Add yours