ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருக்கும் புதிய படம் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபல இந்தி இயக்குநர் ‘தங்கல்’ புகழ் நிதேஷ் திவாரி ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், ராவணன் கதாபாத்திரத்தில் ‘கே.ஜி.எஃப்’ புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்க இருக்கின்றனர். முதலில் ஆலியா பட் சீதையாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் அது மறுக்கப்பட்டது. இந்தப் படத்தை மது மண்டனா, அல்லு அரவிந்த் இணைந்து பேன் இந்தியா முறையில் தயாரிக்கின்றனர்.
மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தப் படத்திற்கு ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மானும், பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளரான ஹான்ஸ் ஜிம்மரும் இணைந்து இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அதுமட்டுமின்றி இப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
தற்போது இந்தப் படத்தின் பட்ஜெட் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி, முதல் பாகம் மட்டும் ரூ.835 கோடி செலவில் எடுக்கப்படவுள்ளது. இதில் பல காட்சிகள் கிராபிக்ஸ் இல்லாமல் அசல் காட்சிகளாக எடுக்கப் படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு மட்டும் 600 நாள்கள் தேவைப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
இந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் மிகப் பிரமாண்டமாக எடுக்கத் திட்டமிட்டு வருவதாகவும், மேலும், இப்படம் அக்டோபர் 2027ல் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் திரைப்பட வர்த்தக ஆய்வாளர் சுமித் கேடல் தெரிவித்திருக்கிறார்.
+ There are no comments
Add yours