இரண்டாம் பாதியும் வெவ்வேறு காமெடி குழுக்களின் காமெடி கலாட்டாக்களால் நிறைந்திருக்கிறது. அந்த காமெடிகளும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த படத்திலும் எள்ளளவுக்குக் கூட லாஜிக் இல்லை. “திரையரங்கிற்குள் நுழையும்போதே கட்டை பை நிறைய லாஜிக்குகளை நீங்களே எடுத்து வாருங்கள்” என்ற முன்னெச்சரிக்கையைக் கொடுத்திருக்கலாம். இக்குறைகளை நடிகர்களின் சேட்டைகளும், ஒன்லைன் காமெடிகளும் ஓரளவிற்கு மறைக்க முயன்றிருக்கின்றன.
இந்திய நகரங்களில் நடக்கும் குண்டுவெடிப்புகள், சென்னையில் சுற்றித் திரியும் தீவிரவாதிகள் எனப் புளித்துப் போன கான்செப்ட்டானது திரைக்கதையை விறுவிறுப்பாக்கும் என நம்பி சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் லாஜிக்கும் இல்லை, ஆழமும் இல்லை என்பதால் பிசுபிசுக்கவே செய்கிறது. வரிசை கட்டும் பாடல்களும் பரபர திரைக்கதைக்குக் கட்டைப் போடுகின்றன. இன்னுமா கதையை நிறுத்திவிட்டு டூயட் சிச்சுவேஷனுக்குப் போய் வருகிறார்கள்? அப்டேட் ஆகுங்கள் பாஸ்!
உருவக் கேலிகளையும் பெண்களை ஆபாசமாகப் பேசுவதையும் காமெடி என இக்காலத்திலும் நினைக்கும் திரை எழுத்தாளரின் பொறுப்பின்மை கண்டிக்கத்தக்கது. க்ளைமாக்ஸ் காட்சித் தொகுப்பு நீளமாக இருந்தாலும், சின்ன சின்ன சுவாரஸ்யமான விஷயங்களும், காமெடி ஒன்லைன்களும் அதைக் கலகலப்பாக்கி இருக்கின்றன.
+ There are no comments
Add yours