சின்னத்திரை நடிகர் சங்கத்தின் இணைச் செயலாளர் பதவியில் இருந்து நடிகரும் கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டவருமான தினேஷ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரவி வர்மாவும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப் பட்டுள்ளதாகவும் சங்கத் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
சிவன் சீனிவாசன் தலைவராகவும் போஸ் வெங்கட் செயலாளராகவும் இருக்கும் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தின் செயற்குழு சில தினங்களுக்கு முன் கூடி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
இவர்கள் இருவருக்கும் சங்கத்துக்கும் இடையே என்ன பிரச்சனை? சங்கத்தில் என்ன நடக்கிறது? அறிந்து கொள்ள சங்கத்தின் கடந்த கால நடவடிக்கை களுக்குச் செல்ல வேண்டியது அவசியம்.
தற்போதைய நிர்வாகம் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்றன. அதற்கு முன் சங்கத்தின் தலைவராக இருந்தார் ரவிவர்மா. அப்போது உறுப்பினர்கள் சிலர் அவர் மீது நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்தனர். நடிகர் நடிகைகளை மலேசியா அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்திய வகையில் மோசடி நடைபெற்றதாகக் குறிப்பிட்டனர் அவர்கள்.
தொடர்ந்து சங்கத்துக்கு நடந்த தேர்தலில், ரவிவர்மா தோல்வியடைய இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக அமைந்தன. ஆனாலும் இந்தத் தேர்தலில் ரவிவர்மா அணி சார்பில் இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் தினேஷ் வெற்றி பெற்றார். தினேஷ் மட்டுமல்லாது ரவிவர்மா அணியைச் சேர்ந்த மேலும் சிலரும் வெற்றி பெற்றனர்.
இருந்த போதும் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதும் ரவி வர்மா உள்ளிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த பொதுக்குழுவில் அது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேறலாமெனச் சொல்லப்பட்ட நிலையில் ரவி வர்மாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அந்த நோட்டீஸுக்கு ரவிவர்மா விளக்கம் அளித்தார். ஆனால் அந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படாமல் அந்தப் பொதுக்குழுவில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தினேஷ் அந்தப் பொதுக்குழுவில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், தொடர்ந்து தொழிலாளர் ஆணையத்தில் புகார் தருவது போன்ற சங்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் ரவி வர்மாவை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்குவது என்ற முடிவை எடுத்த சங்கம் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதற்காக செயற்குழுவைக் கூட்டியதாகச் சொல்கிறார்கள். செயற்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் ரவிவர்மா நீக்கப்பட்டுள்ளார். இனி சங்கத்துக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்கள்.
ரவி வர்மாவைப் பொறுத்தவரை பல முறை சங்கத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த போதும், ஒரே ஒரு முறை தான் வெற்றி பெற்றார். தற்போது அடிப்படை உறுப்பினர் தகுதியை இழந்து விட்டதால் இனி சங்க தேர்தல்களில் ஓட்டுப் போடக் கூட அவரால் முடியாது என்கிறார்கள்.
தினேஷ் மீதான நடவடிக்கைக்குக் காரணமும் அவர் ரவிவர்மாவுடன் சேர்ந்து சங்கத்துக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதுதானாம். அதுகுறித்து விளக்கம் கேட்டதற்கு, சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் மீதே அவர் குற்றச்சாட்டைத் திருப்பி விட்டார் எனச் சொல்கிறார்கள்.
ரவி வர்மாவிடம் நாம் இது தொடர்பாகக் கேட்ட போது,
‘தேர்தல்ல நிற்கத் தடை விதிச்சு எனக்கு உத்தரவு போட்டதை எதிர்த்து லேபர் கமிஷன்ல முறையீடு செய்தேன். அந்த விசாரணை போயிட்டிருக்கு. இதுக்கிடையில அடிப்படை உறுப்பினர் தகுதி நீக்கம்னு சொல்றீங்க. எனக்கு அது தொடர்பா எந்த தகவலும் வரலை. விதிகளையெல்லாம் மீறி அவங்களுக்குத் தெரிஞ்ச எதையோ செய்திட்டிருக்காங்க. தினேஷின் இணைச் செயலாளர் பதவிங்கிறது உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு கிடைச்சது. செயற்குழு கூடி அதைப் பறிக்க முடியாது. பொதுக்குழுவுக்குதான் அதிகாரம் இருக்கு. அந்தப் பொதுக்குழுவுல கூட யார் மீது நடவடிக்கை எடுக்கிறோமோ அவரைக் கலந்து கொள்ள அனுமதிச்சுதான் அதன்பிறகு நடவடிக்கை எடுக்கணும். ஆனா இவங்க நடவடிக்கை எல்லாமே வித்தியாசமா இருக்கு. கடந்த பொதுக்குழுவுல என்னைக் கலந்துக்கவே அனுமதிக்கல. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு’ என்றார்.
தினேஷைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர் பேசினால் அவரது கருத்தையும் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.
+ There are no comments
Add yours