மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது நேற்று மர்ம ஆசாமிகள் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். சல்மான் வீடு, மும்பையில் மேற்கு புறநகர் பகுதியான பாந்த்ராவில், கடற்கரையை ஒட்டி இருக்கும் ’கேலக்ஸி’ என்ற கட்டடத்தில் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் சல்மான் கானுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனாலும், இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் சல்மான் கானின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
சல்மான் கான் இருக்கும் வீடு மிகவும் சிறியது. பொதுவாக, பாலிவுட் நட்சத்திரங்கள் 50 முதல் 100 கோடி வரையிலான வீடு மற்றும் பங்களாக்களில் வசித்து வரும் நிலையில், சல்மான் கான் மட்டும் ஏன் இன்னும் சிறிய வீட்டில் இருக்கிறார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழலாம். அதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
சல்மான் கான் இப்போது இருக்கும் வீடு, ஒரு படுக்கை அறை கொண்ட வீடு. அவரின் பெற்றோர் சல்மான் கான் வீட்டிற்குக் கீழே இருக்கும் வீட்டில் வசிக்கின்றனர்.
பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்து ஒரு படத்திற்கு 100 கோடி வரை சம்பளம் வாங்கும் சல்மான் கான், ஏன் பெரிய வீட்டிற்கு மாறவில்லை என்று அவரிடம் ஒரு முறை கேட்டதற்கு, ”என் பெற்றோர் கீழ் தளத்தில் இருக்கின்றனர். என் அம்மாவுக்கு இந்த வீடு பிடித்துவிட்டது. அதனால்தான் தொடர்ந்து இங்கேயே வசிக்கிறோம். நான் என் அம்மா, அப்பாவிடம் செல்லும்போது அவர்கள் அருகில் படுத்துக்கொள்வேன்” என்று தெரிவித்தார்.
சல்மான் கானுக்கு மும்பையில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் பண்ணை வீடு ஒன்று இருக்கிறது. சல்மான் கான் இதற்கு முன்பு அடிக்கடி அந்த வீட்டிற்குச் செல்வார். ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்ட பிறகு பன்வெல் வீட்டிற்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களுடன் கூட நெருங்கி பழக முடியாத நிலை சல்மான் கானுக்கு ஏற்பட்டுள்ளது.
சல்மான் கான் 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் சென்ற போது அபூர்வ வகை மான்களை வேட்டையாடினார். அவை, பிஷ்னோய் இன மக்களால் புனிதமாகக் கருதப்படுபவை. எனவே, அவற்றை வேட்டையாடியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று, டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரிமினல் லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை விடுத்து, அடிக்கடி கொலை மிரட்டலும் விடுகிறார். எனவேதான், சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours