மகப்பேறு மருத்துவர் சிவா (அசோக் செல்வன்), செஃப் சாண்டி என்கிற சுந்தரி (ஐஸ்வர்யா லட்சுமி), டிமென்ஷியாவில் பாதிக்கப்பட்ட தாயினைப் பார்த்து கொள்ளும் சாய் (வசந்த் ரவி) ஆகிய இந்த மூவர் வாழ்க்கைக்குள் நடக்கும் முக்கோண காதல் கதையே ஜியோ சினிமா தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தின் ஒன்லைன்.
கும்பகோணத்தில் பால்ய பருவத்தில் ‘சுந்தரி’யின் மேல் ஏற்பட்ட காதலுக்காக சிவாவும், சாயும் அடித்துக்கொள்கிறார்கள். பின்னாட்களில் பள்ளி முன்னாள் மாணவர்கள் கூடுகையில் மீண்டும் அவர்களுக்குள் நட்பு மலர்கிறது. இந்நிலையில் சிவா, சாயின் தாயாரின் உடல்நிலையைப் பார்த்து அவனை சென்னைக்கு வர வைக்கிறான். அங்கே சாண்டி என்கிற சுந்தரியின் மீது சாய்க்குக் காதல் துளிர்க்கிறது. அதே நேரத்தில் அவர் சிவாவின் முன்னாள் மனைவி என்பதும் தெரிய வருகிறது. இப்படியான சூழலில் அடுத்து என்ன என்பதே ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தின் கதை.
வசந்த் ரவிக்கு கத்தி, ரத்தம், டாக்சிக் காதலன் என்ற வகையறாக்களில் இருந்து தப்பி ஒரு ஜாலியான கதாபாத்திரம். ஆனால் அவரது வாய்ஸ் மாடுலேஷன், பாடி லாங்குவெஜ் எல்லாவற்றிலும் செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறது. செஃப் சாண்டியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி, இரு நண்பர்கள் மீதும் காதல் ஈர்ப்பு இருக்கிறது என்ற குழப்பமான கதாபாத்திரத்தில் மாட்டிக்கொண்டு நம்மையும் குழப்பத்தில் தள்ளிவிடுகிறார். படத்தின் இறுதி காட்சியில் அவரது நடிப்பு, ‘ஜெனிலியா வகையறா’ தமிழ் சினிமா ஹீரோயினுக்கான புளூ டிக் வெரிஃபிகேஷனை வாங்குகிறது.
படத்தில் சற்றே நடித்திருப்பது அசோக் செல்வனே! இருந்தும் முன்னாள் மனைவியை தன் நண்பருடன் பார்த்துவிட்டு அவர் கொடுக்கும் ரியாக்ஷசன்கள் நாடகத்தனம். கோபம் வருவது போல காமெடி செய்யும் அசோக் செல்வனின் மூன்று சகோதரிகள், அவர்களுடன் போட்டி போட்டு ஜெயிக்கும் தீபா என்பதாக நகைச்சுவை ஏரியாவைப் பாடாய்ப்படுத்துகிறார்கள். குமாரி சச்சு மட்டும் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
அசோக் செல்வன் கனவில் ஐஸ்வர்யா லட்சுமி – வசந்த் ரவி டூயட் பாடுவது, வசந்த் ரவியின் கனவில் ஐஸ்வர்யா லட்சுமி – அசோக் செல்வன் டூயட் பாடுவது, நின்றால் பாடல், உட்கார்ந்தால் பாடல், தும்மினால் பாடல் என மாங்குமாங்கென பாடல்களால் தியாகராஜர் காலத்துக்கே கூட்டிச் செல்கிறார் யுவன்சங்கர் ராஜா. இப்படி முழு ஆல்பமே ஸ்கிப் பட்டனை அழுத்த வைப்பது வேதனை. பின்னணி இசையிலும் பழைய யுவன் மிஸ்ஸிங்! திரைப்படத்துக்கான தரத்தில் ஒளியுணர்வை கடத்த ஏ.டி.பகத்தின் கேமரா கண்கள் தவறியுள்ளது. படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யாவும் பாடல்களுக்கு நடுவே படத்தைக் கத்திரி போடப் போராடித் தோல்வியடைகிறார். பள்ளி, கேளிக்கை உணவகம் ஆகிய இடங்களில் சூர்யா ராஜீவனின் கலை இயக்கத்தில் குறையேதுமில்லை.
மூன்று கதாபாத்திரத்தை அறிமுகம் செய்த விதத்திலேயே ஒரு செயற்கையான ரோம் காம் படத்தில் மாட்டிக்கொண்டோம் என்ற உணர்வைத் தந்துவிடுகிறார் இயக்குநர் ப்ரியா.வி. நடிகர்களின் நடிப்பில் உயிர்ப்பில்லா தன்மையால் ஆக்ஷன், கட் சொல்லி நடிக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஆரம்பத்திலேயே விதைத்து படத்திலிருந்து விலகிவரவைத்துவிடுகிறார்கள். எந்தக் கதாபாத்திரத்தோடும் ஒன்றிப் பயணிக்க முடியவில்லை. குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட காதல், அதனால் நண்பர்களிடையே தற்போது வரை தொடரும் பகை, இப்போதும் காதலிக்காக சண்டை போடுகிறார்கள் என்ற திரைக்கதை அமைப்பெல்லாம் அவுட்டேட் ஆகி வருடங்கள் ஆகிவிட்டனவே! அதிலும் ஆரம்பகால குறும்படத்தின் தரத்தில் இருக்கும் ஆக்கம் நம்மை ரொம்பவே சோதிக்கிறது.
கணவரிடம் விவாகரத்து பெற்ற பெண், மீண்டும் அவரிடம் சகஜமாகப் பேசுவது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் எதற்காக விவாகரத்து நடந்தது, மீண்டும் அவரை காதலிக்க வேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு என்ன நடந்தது என்பதில் தெளிவில்லை. தாயைக் காப்பாற்ற சென்னை வரும் சாய் கதாபாத்திரத்தின் கதை பாதியிலேயே அந்தரத்தில் பறக்கிறது. அவருக்கு வேலை கிடைத்தது என்கிறார்கள், ஆனால் எப்போதும் புல்லட்டில் நாயகியின் பின்னாலே சுற்றிக்கொண்டிருக்கிறார்.
ஆணாதிக்கத்தைப் பற்றிய வசனங்கள் எல்லாம் வைத்துவிட்டு, ஒரு பெண்ணைக் கவர ஸ்டைலாக மாற வேண்டும் என்று வைக்கப்பட்ட காட்சிகள் நகைமுரண். காட்சிகளிலும் வசனங்களிலும் சொல்லவேண்டிய விஷயத்தை மாண்டேஜுகளில் சொல்வதாக எடுத்த முடிவு பெரிய பலவீனம். அந்தப் பலவீனத்துக்கு மேலும் பலம் சேர்க்கிறது பாடல்களின் இசை. க்ளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகி என்ன சொல்ல வருகிறார் என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
மொத்தத்தில் 2000-ம் ஆண்டு காலகட்டங்களில் வந்த முக்கோண காதல் கதை டெம்ப்ளேட்களை மையமாக வைத்து, அதில் எந்த விதமான சுவாரஸ்யத்தையும், புதுமையையும் சேர்க்காமல் எதையோ காட்டிவிட்டு ‘பொன் ஒன்று கண்டதாக’ நம்மை நம்ப வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்!
+ There are no comments
Add yours