மலேசியாவில் உணவகம் நடத்திவரும் அறிவழகன் என்னும் அறிவு (விஜய் ஆண்டனி)காதல் திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறார். ஒரு துக்க வீட்டில் லீலாவைக் (மிருணாளினி) கண்டதும் காதல் வருகிறது அவருக்கு. சினிமாவில் நாயகியாகும் கனவுடன் இருக்கும் லீலா, தந்தையின் கட்டாயத்தால் அறிவைத் திருமணம் செய்கிறார். ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் கணவனை ஒதுக்கிவைக்கிறார், லீலா. மனைவியின் காதலைப் பெறும் முயற்சியில் அவரை நாயகியாக நடிக்க வைத்து படம் தயாரிக்கிறார் அறிவு. அவரின் இந்த முயற்சி வெற்றி பெற்றதா? லீலாவின் கதாநாயகி கனவு என்ன ஆனது? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்கிறது படம்.
காதலுக்கு ஏங்கும் நாயகன், கனவைத் துரத்தும் நாயகிக்கான முரணை முன்வைத்து ஒரு காதல் நகைச்சுவைப் படம் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். நாயகன் 90’ஸ் கிட், நாயகி 2கே கிட் என்பதும் இருவருக்கும் இடையில் பத்து வயது வித்தியாசம் என்பதும் கதைக்குக் கூடுதல் சுவாரசியத்தைச் சேர்ப்பதற்குத் தோதான அம்சம். இதை வைத்து முதல் பாதியில் சில ரசிக்கத்தக்க காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வீட்டுக்குள் புகுந்துகொள்ளும் லீலாவின் நண்பர்கள் செய்யும் அலப்பறைகள் அதை அறிவு கையாளும் விதம் ஆகியவற்றை வைத்து ரசனையான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழில், கதாநாயகன், இயக்குநர், இசையமைப் பாளர் என சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் ஆண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் பெண் கதாபாத்திரங்கள் ஒப்பீட்டளவில் அரிதானது. எனவே கதாநாயகியாக சாதிக்கத் துடிக்கும் லீலா கதாபாத்திரம் புத்துணர்வை அளிக்கிறது. அவளது கனவும் அதை அடைவதற்கான போராட்டங்களும் ஒழுங்காக சித்தரிக்கப்படாததால் இந்தப் புத்துணர்வு விரைவில் மறைந்துவிடுகிறது.
அறிவு, தனது மனைவியின் காதலைப் பெறும் முயற்சிகளுக்கே அதிக திரைநேரம் ஒதுக்கப் பட்டுள்ளது. இதை வைத்து இரண்டாம் பாதியில் சில எமோஷனல் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புக் காட்சிகள் சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன. அறிவுக்கும் லீலாவுக்கும் இடையிலான உறவில் நிகழும் மாற்றங்களை இன்னும் அழுத்தமாகச் சித்தரித்திருக்கலாம். சிறுவயதில் தொலைந்துபோன அறிவின் தங்கையை வைத்து பின்னப்பட்டுள்ள சென்டிமென்ட் காட்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அது தேவையற்றத் திணிப்பாகவும் இருக்கிறது.
விஜய் ஆண்டனி, பல வகை உணர்ச்சிகளை வெளிப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார். மிருணாளினி எமோஷனல் நடிப்பில் சற்று மெருகேறி இருந்தாலும் அவர் கதாபாத்திரம் வலுவற்றதாக இருப்பதால் உரிய தாக்கம் செலுத்தத் தவறுகிறார். மிருணாளினியின் நண்பராக வரும் ஷா ராவும் விஜய்ஆண்டனிக்கு உதவும் யோகிபாபுவும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். பரத் தனசேகர் இசையில் பாடல்கள் பரவாயில்லை.
கதையில் புதுமையான அம்சங்களும் சில சுவாரசியமான காட்சிகளும் இருந்தாலும் ஒட்டுமொத்தத் திரைக்கதையாகக் கவரவில்லை இந்த ‘ரோமியோ’.
+ There are no comments
Add yours