`இன்று நேற்று நாளை -2′, `பீட்சா -4′ ஆகிய சீக்குவல் திரைப்படங்களின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த இரண்டு திரைப்படங்களையும் சி.வி.குமாரின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், ‘சூது கவ்வும்’ இரண்டாவது பாகத்தையும் இந்த நிறுவனமே தயாரித்திருக்கிறது. இதுமட்டுமின்றி இவரின் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அடுத்தடுத்து ‘மாயவன் – 2’ , ‘முண்டாசுப்பட்டி – 2’ ஆகிய திரைப்படங்களும் தயாராகி வருகின்றன. இப்படியான சீக்குவல் திரைப்படங்கள் தொடர்பாகத் தயாரிப்பாளர் சி.வி.குமாரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
‘சூது கவ்வும்- 2’ தொடங்கின பாயின்ட் எது?
“‘சூது கவ்வும் – 2’ பண்றதுக்கான பிளான் இப்போ வந்தது இல்ல. இயக்குநர் நலன் குமாரசாமியே இதை ரெண்டு பாகமாகத்தான் யோசிச்சு வச்சிருந்தாரு. ‘சூது கவ்வும்’ படத்துக்கு முதல்ல ‘பிளாக் டிக்கெட்’னுதான் இயக்குநர் நலன் பெயர் முடிவு பண்ணி வச்சிருந்தார். இந்த இரண்டாம் பாகத்துக்கான சின்ன ஒன்லைன் ஐடியாவை அவர் வச்சிருந்தாரு. ஆனா, அவர் ‘என்னால இதை எழுத முடியாது, டீம் வச்சு எழுதிக்கோங்க’ன்னு சொல்லிட்டாரு. இப்போ இந்தப் படம் முடியுறதுக்கு 3 வருஷமாகிடுச்சு. இது பிரான்சைஸ் கிடையாது. முதல் பாகத்தோட சீக்குவல் இது. அதுனாலதான் கொஞ்சம் அதிகமான நேரமெடுத்தது.”
‘சூது கவ்வும் – 2’ திரைப்படத்துக்கு விஜய் சேதுபதி என்ன சொன்னார்?
“இது தொடர்பாக விஜய் சேதுபதிகிட்ட பேசினோம். ‘ஒரு விஷயம் நாம கிளாசிக்காகப் பண்ணிட்டோம். அதை நாம தொந்தரவு செய்யக்கூடாது’ன்னு அவருக்குக் கருத்தியலாக இதில் உடன்பாடு இல்ல. இந்தப் படத்துக்கு ‘சூது கவ்வும் – 2 நாடும் நாட்டு மக்களும்’ன்னு தலைப்பு வச்சதும் ‘இதுக்குப் பிறகு நீங்க தர்மம் வெல்லும்னு கடைசியாக ஒரு பாகம் எடுத்துப் படத்தை முடிக்கணும்’ன்னு இயக்குநர் நலன் குமாரசாமி சொன்னாரு. நானு, அதுக்கு ஒத்துகிட்டேன். இப்போ ‘சூது கவ்வும் – தர்மம் வெல்லும்’ங்கிற மூன்றாவது பாகத்திற்கான கதை வேலைகள் போயிட்டு இருக்கு.”
‘இன்று நேற்று நாளை – 2’, ‘பீட்சா – 4’ படத்தோட பூஜைகள் சமீபத்துல நடந்திருக்கு… அந்தப் படங்கள் பற்றி?
“பீட்சா படத்தோட தொடரை பண்ணிட்டே இருக்கணும்னு ஆசைப்படுகிறோம். இப்போ பீட்சா திரைப்படத்தோட இரண்டு மற்றும் மூன்றாம் பாகமும் ஒரு பிரான்சைஸ். அதுக்கு முந்தைய பாகத்தோட தொடர்பே இல்லாமல் இருக்கும். ஆனா, பீட்சா திரைப்படத்தோட நான்காம் பாகத்துக்கும் முதலாவது பாகத்துக்கும் கனெக்ட் இருக்கும். ‘இன்று நேற்று நாளை – 2’ முன்னாடியே நாங்க பிளான் பண்ணினதுதான். இரண்டாம் பாகத்துக்கு இயக்குநர் ரவிக்குமார்தான் கதை, திரைக்கதை பண்ணியிருக்கார். விஷ்ணு விஷால் வச்சே பண்ணலாம்னு முன்னாடி யோசிச்சிருந்தோம். அதுக்குப் பிறகு கொரோனா, சினிமாவுல நிறைய ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்தன.
இந்தப் படங்களையெல்லாம் தாண்டி என்னோட ‘மாயவன்’ திரைப்படத்தோட இரண்டாம் பாகத்தை டைரக்ட் பண்ணிட்டிருக்கேன். ‘முண்டாசுப்பட்டி – 2’ திரைப்படத்துக்கான கதை வேலைகள் நடந்துட்டு இருக்கு. முதல் பாகத்தோட இயக்குநர் ராம்குமார் இந்த வேலைகளைப் பார்க்கல. புதுசா ஒரு டீம் வேலைப் பார்த்துட்டு இருக்காங்க. ‘முண்டாசுப்பட்டி’ படத்தோட முதல் பாகத்துல மிர்ச்சி சிவா நடிக்க வேண்டியது. மிஸ் ஆகிருச்சு. ஆனா ‘சூது கவ்வும் – 2’ திரைப்படத்துக்கு மிரச்சி சிவா மாதிரி காமெடி பண்ணக்கூடிய கதாபாத்திரம் தேவைப்பட்டுச்சு. அவரையே புடிச்சிட்டோம்!”
இந்த சீக்குவல் படங்களுக்கு முந்தைய பாகங்களோட கனெக்ட் இருக்குமா?
“பீட்சா படத்தோட முதல் பாகத்தைவிட இரண்டாவது பாகம் அதிகமான பிசினஸ் பண்ணுச்சு. பீட்சா படத்தோட மூணாவது பாகம் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்துல டிரெண்டிங்ல இருந்தது. இப்போ பீட்சா படத்தோட நான்காம் பாகத்துக்கும் முதலாவது பாகத்தும் கனெக்ட் இருக்கு. ‘இன்று நேற்று நாளை’ படமெல்லாம் சீக்குவல்தான்… அந்தக் கதையிலிருந்துதான் தொடரும். ‘முண்டாசுப்பட்டி – 2’-வும் அப்படிதான். ‘சூது கவ்வும்’ திரைப்படத்துல வர்ற ‘தாஸ் & கேங்’க்கு முன்னாடியே ஒரு கேங் இருந்தாங்கணுதான் ‘சூது கவ்வும் – 2’ திரைப்படம் இருக்கும்.”
பீட்சா – 4 படத்தை பத்தி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்கிட்ட பேசினீங்களா?
“இல்ல, நான்காம் பாகம் தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ்கிட்ட பேசல. பீட்சா – 2 பண்ணும்போது அவர்கிட்ட கேட்டிருந்தோம். அதுக்கு அவர், ‘நீங்க தாராளமாக பண்ணுங்க’னு சொன்னார். இப்போ வரைக்கும் நாங்க நல்ல நண்பர்கள்தான். எல்லா படத்தோட சீக்குவல் பண்ணும்போதும் அந்தந்த இயக்குநர்கள்கிட்ட பேசிட்டுதான் பண்றோம்.”
பா.இரஞ்சித், ‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம்குமார்கூட இரண்டாவது முறை சேர்ந்து படம் பண்ணாததுக்குக் காரணம் என்ன?
“ராம்குமாரோட ‘ராட்சசன்’ படத்துக்கு என் ஆபிஸ்லதான் முதற்கட்டப் பணிகள் நடந்தன. ஷூட்டிங் தொடங்கப்போற இரண்டு நாள்களுக்கு முன்னாடிதான் ”ராட்சசன்’ படம் நம்ம பண்ணவேண்டாம்’னு ராம்குமார்கிட்ட சொன்னேன். அவரும் அதை புரிஞ்சுகிட்டு வெளிய இந்தப் படத்தை பண்றேன்னு சொன்னாரு. முதல்ல ‘ராட்சசன்’ படத்துல நடிகர் ஜெய் நடிக்க வேண்டியது. பா.இரஞ்சித்தோட இரண்டாவது படமே ‘சார்பட்டா பரம்பரை’தான். அந்தச் சமயத்துல ‘ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல்ராஜா சார்தான் எங்களை அறிமுகப்படுத்தினார். அவர் ரஞ்சித்கூட இரண்டாவது படம் பண்ணனும்னு சொல்லும்போது நாம எதுவுமே சொல்ல முடியாது. அதுமட்டுமில்ல பெரிய நடிகர்கள்கூட எனக்குத் தேதி தர்றேன்னு சொன்னாங்க. எனக்குப் பெரிய நடிகர்களோட படம் பண்ணனும்ங்கிற ஐடியாலஜி இல்ல.”
நீங்க இயக்கிய ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்துலயும் ‘மாயவன்’ படத்துலயும் டேனியல் பாலாஜிதான் வில்லனாக நடிச்சிருப்பாரு. அவரோட மறைவு தமிழ் சினிமாவுக்கு அதிர்ச்சியாக இருந்துச்சு. அவருடனான நட்பு பற்றி…
“ரொம்ப நல்ல மனுஷன். பெரிய இழப்பு அது. நிறைய விஷயங்கள் பேசுவோம், சண்டை போடுவோம். ‘மாயவன்’ படம் பண்ணும்போது அவர் ‘பைரவா’ படத்துல நடிச்சிட்டு இருந்தாரு. அந்தப் படத்துக்கு அவருக்கு 75 லட்சம் சம்பளம். அந்த நேரத்துல ‘நான் ரொம்ப நெருக்கடியான சூழ்நிலையில இருக்கேன், ஒரு படம் பண்ணப்போறேன்’னு சொன்னேன். எனக்காக 5 லட்சம்தான் இந்தப் படத்துக்காக சம்பளம் வாங்குனாரு. அவர் கட்டியிருக்கிற கோயில்களுக்குப் போயிருக்கேன். அவரோட இறப்புக்குக்கூட என்னால வரமுடியல. நான் அப்போ ஹைதராபாத்ல இருந்தேன்.”
இவற்றில் எந்த சீக்குவல் படத்திற்கு அதிகளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள் என்பதை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
+ There are no comments
Add yours