இந்தியக் கால்பந்தாட்டத்தின் பொற்காலமான 1951 – 62 ஆண்டுகளில் எஸ்.ஏ.ரஹீம் என்ற பயிற்சியாளர் உருவாக்கிய இந்திய அணி செய்த சாதனைகளை ரத்தமும் வியர்வையுமாக கண்முன் நிறுத்தும் முயற்சியே இந்த பயோபிக்கின் ஒன்லைன்.
1952-ம் ஆண்டு ஹெல்சிங்கி ஒலிம்பிக் போட்டியில் ஹங்கேரி அணிக்கு எதிராக இந்தியக் கால்பந்து அணி 10-1 என்ற கணக்கில் மோசமானதொரு தோல்வியைச் சந்திக்கிறது. அது நாளிதழ்களில் பூதாகரமான செய்தியாக வெளியாக, இந்தியக் கால்பந்து சம்மேளனம், பயிற்சியாளர் எஸ்.ஏ.ரஹிமிடம் (அஜய் தேவ்கன்) விளக்கம் கேட்க, சொந்த அணியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைத் தந்தால், நிச்சயம் வெற்றியைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கிறார்.
இந்தியாவின் சிறந்த கால்பந்து திறமையாளர்களை அடையாளம் காண, தேசம் முழுவதும் தேடலில் ஈடுபட்டு ஓர் அணியை உருவாக்குகிறார். அந்த அணிக்கும் ரஹீமுக்கும் பல தடங்கல்களும் சோதனைகளும் சம்மேளனத்தின் மூலமாகவும், வங்காளத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் மூலமாகவும் ஏற்படுகிறது. இதையெல்லாம் தாண்டி ‘கால்பந்தில் ஆசியாவின் பிரேசில் – இந்தியா’ என்று அழைக்கும் அளவிற்கு அப்போது அந்த அணியை எப்படி உருமாற்றினார் என்ற பயணமே இந்த ‘மைதான்’ படத்தின் கதை.
வாழ்ந்து மறைந்த ஓர் ஒப்பற்ற மனிதரின் பாத்திரத்துக்குத் தனது தேர்ந்த நடிப்பின் மூலம் மகத்தான அஞ்சலி செய்திருக்கிறார் அஜய் தேவ்கன். விறைப்பான பயிற்சியாளராக கம்பீரமான நடிப்பைத் தருபவர், தன் இருப்பு உடைந்து போகும் இடங்களில் நம் கண்களை குளமாக்குகிறார். அதிர்ந்து பேசாத, அதிகமாக உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ளாத இந்தப் பாத்திரம் அஜய் தேவ்கனின் கரியரிலும் நிச்சயம் ஒரு மைல்கல்! அன்பான மனைவியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் இடங்களில் ‘க்யூட்’ வாங்கும் பிரியாமணி, ரத்தம் சிந்திய கைக்குட்டையில் கண்ணீர் விடும் காட்சிகளிலும், அழுதுகொண்டே தைரியமாகக் கணவருக்கு அறிவுரை சொல்லும் காட்சிகளில் ‘இது நம்ம முத்தழகு’ என நாஸ்டால்ஜியா ஃபீல் கொடுக்கிறார்.
படத்தில் ஒரு இடத்தில் அஜய் தேவ்கன், “மைதானத்தில் 11 வீரர்கள் இருப்பார்கள் என்றாலும், அது ‘ஓர்’ அணியாக எப்போது இருக்கிறதோ அப்போதுதான் வெற்றி வரும்” என்பார். அந்த வசனத்துக்கு நியாயம் சேர்ப்பது போலக் கால்பந்து வீரர்களாகவே வாழ்ந்து அனைத்து துணை நடிகர்களும் வெற்றிக்கான ‘ஃப்ரீ கிக்’கை அலாதியாக அடித்திருக்கிறார்கள். குறிப்பாக சுனி கோஸ்வாமி, பீட்டர் தங்கராஜ், பிகே பனெர்ஜி, ஜர்னல் சிங், பிராங்கோ ஆகிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் மனத்தை ஆட்கொள்கிறார்கள்.
எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கஜ்ரஜ் ராவ், ருத்ரனில் கோஷ் ஆகியோரின் நடிப்பு, வெறுப்பு என்னும் ரெட் கார்டை வாங்கும் அளவுக்குச் சிறப்பாகவே இருக்கிறது. சில இடங்களில் மிகை நடிப்பைத் தவிர்த்திருக்கலாம். அதேபோல கஜ்ரஜ் ராவ்வின் விக் படம் முழுவதும் துருத்தலாகவே தெரிகிறது.
ரஹீமின் மகனாக வரும் ரிஷப் ஜோஷி, மொட்டை மாடி காட்சியில் அஜய் தேவகனுடன் நடிப்பில் ‘டேக்கில்’ செய்து போட்டிப் போடுகிறார். அதுபோல மைதானத்தில் ஆர்ப்பரிக்கும் பல்வேறு நாட்டு ரசிகர்களின் தேர்வு கூட கனகச்சிதமாகப் பொருத்திப்போகிறது. அந்தளவுக்கு மெனக்கெடலும் தெரிகிறது. இப்படி நடிகர்களின் தேர்வினை அட்டகாசமாகச் செய்திருக்கும் படக்குழுவுக்குப் பூங்கொத்துகள்!
இந்தக் கதை ஒரு மனிதரின் வாழ்வில் நடக்கிற பத்தாண்டுகளின் பதிவு என்பதைத் தாண்டி இந்தியக் கால்பந்தாட்ட அணியின் வரலாற்றினையும் சேர்த்தே சொல்ல வேண்டும் என்கிற சவாலும் இருக்கிறது. அதை நேர்த்தியாகக் கையாண்டது மட்டுமல்லாமல் ஜனரஞ்சகமாகவும் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் அமித் ரவிந்திரநாத் சர்மா. இம்மி பிசகினாலும் ‘கிரிஞ்ச்’ வகையறாக்களில் சேர்க்கப்படும் காட்சிகளில் அளவான நடிப்பையும், சிறப்பான வசனங்களையும் வைத்துத் தேர்ந்த கதைசொல்லியாக நம்மைக் கதையோடு கட்டிப்போடுகிறார்.
`இத்தனை மனித வளமிக்க நாட்டில் நம்மால் கால்பந்து விளையாட்டில் இன்னமும் ஏன் சோபிக்க முடியவில்லை?’ என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதற்கான விடையை மறைமுகமாக, அதே சமயம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே தொட்டுச் செல்கிறது படம்.
படத்தின் முதுகெலும்பே கால்பந்து போட்டிகளின் ஒளிப்பதிவு என்று பாராட்டும் அளவுக்கு ஒளிப்பதிவாளர்கள் துஷார் காந்தி ரே, ஃபியோடர் லியாஸ் ஆகியோர் உழைத்திருக்கின்றனர். கேமரா கோணங்கள் மற்றும் பிளேஸ்மென்ட் ஆகியவை FIFA போட்டிகளை நேரில் சென்று பார்ப்பது போல மைதானத்துக்குள்ளேயே நம்மை இழுத்துச் சென்றிருக்கிறது. அதிலும் அந்த கடைசி 30 நிமிடங்கள் தியேட்டரில் ஆர்ப்பரிக்க வைக்கும் மேக்கிங்! இதற்குப் பக்கபலம் சேர்த்திருக்கிறது தேவ் ராவ் ஜாதவ் மற்றும் ஷானாவாஸ் மோசானியின் எடிட்டிங் கூட்டணி.
இந்த மாதிரியான பயோ-பிக்கில் ஆங்காங்கே வைக்கப்படும் உணர்வுபூர்வமான காட்சிகள்தான் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும். அதற்கான விஷயங்களைத் திரைக்கதையில் சரியாக விகிதத்தில் சேர்த்திருக்கிறது சாய்வின் க்வாட்ராஸ் அடங்கிய எழுத்துக் கூட்டணி. குறிப்பாகப் படபடக்க வைக்கும் இறுதிப் போட்டியில் சாதாரண கீப்பர் கிளவுஸை வைத்து மனித உணர்வுகளைக் கடத்தும் காட்சி அத்தனை நெகிழ்ச்சி!
அதேபோல, “நான் என் வாழ்நாளையே இந்த விளையாட்டுக்குக் கொடுத்துள்ளேன், எனக்காக ஐந்து நிமிடங்கள் கொடுக்க முடியாதா?”, “எந்த டீமா இருந்தாலும் ஜெயிக்க முடியும்ன்னு நான் நம்பறேன். ஆனா, நான் களத்துக்கு வெளியே இருக்கறவன். நான் அதை நம்பி பிரயோஜனமில்லை. உள்ளே ஆடற நீங்க நம்பணும்” என்கிற ரீதியிலான பட்டாசான வசனங்களில் ரித்தேஷ் ஷா, சித்தன் மாகோ கூட்டணி அப்ளாஸ் அள்ளுகிறது.
கால்பந்தில் கோல் அடிப்பதற்கு அசிஸ்ட் மிகவும் முக்கியமானது. படத்தின் இயக்குநரும் அப்படியொரு அசிஸ்ட்டினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பெற்றிருக்கிறார். ஹைதராபாத்தின் தெருக்களில் முதன்முதலில் ஒரு கால்பந்து விளையாடும் இளைஞனை ரஹீம் அடையாளம் காணும்போது ஒலிக்கும் அந்த இசை, காட்சிகளின் உணர்வுக்குப் பக்கபலமாக, அதை இன்னும் மெருகேற்றும் முனைப்புடன் படம் முழுவதுமே தொடர்ந்து ஒலித்திருக்கிறது.
அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில், உணர்வுகளைக் காட்சிகளாகக் கடத்திய பின்னர், ஏ.ஆர்.ரஹ்மான் முழுப்பொறுப்பையும் எடுத்துக்கொண்டு நம் ஆன்மாவைத் தட்டி எழுப்பும் வகையில் ஒரு பாடலையும் பின்னணி இசையையும் கொடுத்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சி வீரியமிக்கதாக மாற, அதுவுமே ஒரு பிரதான காரணம். மற்ற பாடல்களும், அதன் வரிகளும் ஆழமாகவே எழுதப்பட்டுள்ளன.
படம் முடிந்த பின்னர் உண்மையாக வாழ்ந்த நிஜ வீரர்களைக் காட்டிய விதம் சிறப்பான மரியாதை. அதே சமயம், பயோபிக்கின் க்ளிஷேக்களைத் தவிர்க்க நினைத்த இயக்குநர், ஸ்போர்ட்ஸ் டிராமாவுக்கான க்ளிஷேக்களையும் தவிர்த்திருக்கலாம். நடந்த அத்தனை நிகழ்வுகளையும் காட்டாமல், போட்டிகளைக் கூட ஆரம்பத்தில் முழுமையாகக் காட்டாமல் படத்தை ஓட்டியது நல்ல முடிவுதான் என்றாலும் தொடக்கத்தில் சில இடங்களில் அதனாலேயே உணர்வுபூர்வமாக இணைய முடியாமல் போயிருக்கிறது.
சிறு குறைகள் கடந்து, ஓர் அணியில் அனைவரும் ஒரே கோலுக்காக ஆத்மார்த்தமாக இணைந்து பணியாற்றினால் `மைதானத்தில்’ வெற்றி நிச்சயம் என்று சொல்லி, தொடர் தோல்விகளில் தத்தளித்துவரும் பாலிவுட்டுக்குப் பெரும் நம்பிக்கையை விதைக்கிறது இந்த `மைதான்’.
+ There are no comments
Add yours