சென்னை: கிரிக்கெட்டர் டேவிட் வார்னரும், இயக்குநர் ராஜமவுலியும் இணைந்து ஜாலியான விளம்பர வீடியோ ஒன்றில் நடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்தவர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் வரும் பாடல்களை பாடி, நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களாக பதிவிடுவது, குடும்பத்துடன் நடனமாடி வீடியோக்களை பகிர்வது என எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
அந்த வகையில் தற்போது அவரும் தெலுங்கு இயக்குநர் ராஜமவுலியும் யுபிஐ விளம்பரம் ஒன்றுக்காக இணைந்து நடித்துள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், வார்னர் கிரிக்கெட்டை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தலாம் என உற்சாகமூட்டி வருகின்றனர்.
விளம்பர வீடியோ எப்படி? – டேவிட் வார்னர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவின் தொடக்கத்தில் பேசும் ராஜமவுலி, “டேவிட் வார்னர் காரு… உங்கள் மேட்ச் டிக்கெட்டுக்கு டிஸ்கவுன்ட் கிடைக்குமா?” என கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் வார்னர், “ராஜா சார் உங்களிடம் CRED யுபிஐ இருந்தால் கேஷ்பேக் கிடைக்கும்” என்கிறார்.
“என்னிடம் வழக்கமான யுபிஐ இருந்தால்…” என ராஜமவுலி கேட்க, “அப்போது டிஸ்கவுன்ட் கிடைக்க நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என சொல்ல அடுத்த ஒரு நிமிட மவுனத்துக்குப் பிறகு டேவிட் வார்னரின் கெட்டப்பே மாறுகிறது.
அந்த உதவி என்னவென்றால் டேவிட் வார்னரை திரைப்படத்தில் நடிக்க வைப்பது. அவரை நடிக்க வைக்க ராஜமவுலி படாத பாடு படுகிறார். அரசர் வேடம் போட்டு வாளை தூக்குவதற்கு பதிலாக வார்னர் பேட்டை தூக்குகிறார். அடுத்து நடன காட்சி ஒன்று வருகிறது.
அதன்பின் ‘ஆஸ்கர் கிடைக்குமா?’ என வார்னர் கேட்க ராஜமவுலி முறைக்கிறார். போர் காட்சியில் குதிரையில் ஏறி சண்டையிடும்போது, “கங்காரு” கிடைக்குமா என கேட்கிறார். இந்த காட்சிகளையெல்லாம் மனத்திரையில் ஓடவிட்டுப் பார்க்கும் ராஜமவுலி, “உடனே வேணாம். நான் CRED யுபிஐ அப்கிரேட் செய்துகொள்கிறேன்” என முடிக்கிறார். ஜாலியான இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.