இயக்குநர் ஸ்ரீதருக்கு வெற்றிகரமான அறிமுகத்தைக் கொடுத்த படம், ’கல்யாண பரிசு’. வெளியான காலகட்டத்தில் தமிழ் திரையுலகில்திருப்பு முனையாக அமைந்த படம் இது.
நாயகனை 2 சகோதரிகள் காதலிக்கிறார்கள். ஒருத்தி காதலைத் தியாகம் செய்வதுதான் கதை. ஸ்ரீதரின் வீனஸ் பிக்சர்ஸ் பங்குதாரர்களான கிருஷ்ணமூர்த்தியும், கோவிந்தராஜனும் கதையைக்கேட்டார்கள். கிருஷ்ணமூர்த்தி, இது நாம் தயாரித்த ‘அமரதீபம்’ கதையைப் போலவே இருக்கிறதே என சொல்லிவிட்டார். ‘அது வேறொருகோணத்தில் எழுதப்பட்ட கதை,இது வேறு’ என்றார் ஸ்ரீதர். ‘இரண்டுமே முக்கோண காதல்கதைதானே’ என்றார் கிருஷ்ணமூர்த்தி. அவருக்கு இந்தக் கதையின்மீது நம்பிக்கையில்லை. பிறகு இரண்டாவது முறையாக மேம்படுத்தப்பட்ட கதையைக் கேட்ட அவர், சம்மதித்தார். அப்போது ஸ்ரீதரே இயக்கட்டும் என்று அனைவரும் சொல்ல, ஏற்கெனவே அந்த ஆசையில் இருந்த ஸ்ரீதர், இயக்குநர் ஆனார்.
ஸ்ரீதரின் நண்பரான கோபு, இந்தப்படத்துக்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வீனஸ் நிறுவனத்தில் வசனகர்த்தாவாக சேர்ந்துவிட்டார். இந்தப் படத்தின் நகைச்சுவை பகுதியை அவர்தான் எழுதினார். அவர் சொந்த வாழ்க்கையில் இருந்தே அதை எழுதியதாகச் சொல்வார்கள்.
ஜெமினி கணேசன் நாயகன். சி.ஆர்.விஜயகுமாரி, சரோஜாதேவி நாயகிகளாக நடித்தார்கள். தங்கவேலு, எம்.சரோஜா, எஸ்.டி.சுப்புலட்சுமி, ஏ.நாகேஷ்வர ராவ், நம்பியார் என பலர் படத்தில் உண்டு. தங்கவேலுவும் எம்.சரோஜாவும் காமெடி பகுதியைப் பார்த்துக் கொண்டனர். எழுத்தாளர் என்றும் மன்னார் அண்ட் கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் தங்கவேலு அடித்துவிடும் நகைச்சுவைகள், அப்போது ஆஹோ ஓஹோ ஹிட். இதன் நகைச்சுவை பகுதிகள், தனி ஆடியோ கேசட்டாக வெளியானது, அப்போது.
வின்செட் ஒளிப்பதிவு செய்தார். பாடகர் ஏ.எம்.ராஜா, இசை அமைப்பாளராக அறிமுகமானார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். ஏ.எம்.ராஜா, பி.சுசீலா, ஜிக்கி, கே.ஜமுனா ராணி பாடல்களைப் பாடினர்.
‘வாடிக்கை மறந்தது ஏனோ’, ‘உன்னைக்கண்டு நான் வாட’, ‘காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ உட்பட அனைத்து பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.பலரின் நேயர் விருப்ப பட்டியலில் இந்தப் படத்தின் பாடல்கள் இப்போதும் இருக்கின்றன. ‘வாடிக்கை மறந்ததும் ஏனோ’ பாடலில் ஜெமினியும் சரோஜாதேவியும் சைக்கிள் ஓட்டியபடி செல்வார்கள். சைக்கிள் ஓட்டிய அனுபவம் இல்லாத சரோஜாதேவி ஓட்ட கற்றுக்கொண்டார். இந்தப் படம் 25 வாரங்களுக்கு மேல்ஓடியது. நூறாவது நாள் விழாவில், தங்கவேலுவும் எம்.சரோஜாவும் மதுரை முருகன் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.
1959-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் தெலுங்கில் பெள்ளி கனுகா (1960),இந்தியில் நஸ்ரானா (1961) என்ற பெயர்களில் ரீமேக் செய்யப்பட்டது. ஸ்ரீதரே இயக்கினார்.