சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. அரசியல் மட்டுமல்லாமல் திரையுலகிலும் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து முத்திரை பதித்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது திரையுலக பயணம் குறித்த விரைவுப் பார்வை.
மூத்த திராவிட அரசியல் தலைவர்களில் முக்கியமானவரான ஆர்.எம்.வீரப்பன், எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர். அதேபோல், மறைந்த முதல்வர்களான ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவைகளிலும் அமைச்சராக இருந்தார். அரசியல் களத்தில் மட்டுமல்ல திரையுலகிலும் தனி முத்திரை பதித்தவர் ஆர்.எம்.வீரப்பன்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் கடந்த 1953-ம் ஆண்டு ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். இதற்கு ஆர்.எம்.வீரப்பன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளியான முதல் படம் ‘நாடோடி மன்னன்’ (1958). இந்நிறுவனம் சார்பில் ‘அடிமை பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டன.
தொடர்ந்து 1963-ல் எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் ‘சத்யா மூவீஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் ஆர்.எம்.வீரப்பன். பின்னர் எம்ஜிஆரை வைத்து, ‘தெய்வத் தாய்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘காவல்காரன்’, ‘ரிக்ஷாகாரன்’, ‘இதயக்கனி’ உட்பட பல படங்களை தனது சத்யா மூவீஸ் மூலம் தயாரித்தார்.
அதேபோல, எம்ஜிஆருக்குப் பின் ரஜினியின் தொடக்க காலக்கட்டத்தில் பல்வேறு படங்களை தயாரித்து வசூலை குவித்தது ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் நிறுவனம். 1981-ல் வெளியான ரஜினியின் ‘ராணுவ வீரன்’ தொடங்கி, ‘மூன்று முகம்’, ‘தங்க மகன்’, ‘ஊர்க்காவலன்’, ‘பணக்காரன்’, ‘பாட்ஷா’ ஆகிய படங்களையும், கமலை வைத்து, ‘காக்கி சட்டை’, ‘காதல் பரிசு’ ஆகிய படங்களை தயாரித்தார். இதில் ‘பாட்ஷா’ படம் வெளியான சமயத்தில் தென்னிந்திய சினிமாவில் அதிகபட்ச வசூல் சாதனையை குவித்த படம் என்ற சாதனையை பெற்றது.
பாட்ஷா பட வெள்ளிவிழா நிகழ்வு: 1995 பொங்கல் பண்டிகை அன்று வெளியான ‘பாட்ஷா’ வெள்ளிவிழா கொண்டாடியது. சென்னையில் 184 நாள்கள் ஓடியது. பாட்ஷா’ படத்தின் வெள்ளி விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இந்த விழாவில் முக்கியமான ஒரு பிரச்சினை பற்றிப் பேச விரும்புகிறேன். சமீப காலமாக, தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழக முதல்வருக்கு (ஜெயலலிதா) இதை என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாசாரத்தை ஒழிக்கச் சட்டம் கொண்டு வாருங்கள்” என்று பேசினார்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக்கொண்டே, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பற்றிப்பேசியிருந்தார் ரஜினிகாந்த். இதையடுத்து ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ‘பாட்ஷா’வுக்குப் பிறகு அவர் திரையுலகில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் அவர் தயாரித்த படங்கள் மூலம் என்றென்றும் நினைவுக்கூரப்படுவார் ஆர்.எம்.வீரப்பன்.