புதுடெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்று கங்கனா கூறியது குறித்து நேதாஜியின் கொள்ளுப் பேரன் சந்திரகுமார் போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “பஞ்சாப் மற்றும் வங்கப் பிரிவினைக்குப் பிறகான இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. யாரும் அதை மாற்ற முடியாது. பிரிக்கப்படாத மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவின் முதல் பிரதமராக சுபாஷ் சந்திரபோஸ் இருந்தார். 1943ஆம் ஆண்டு அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட ஆசாத் ஹிந்த் அரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நேதாஜி இருந்தார்.
நேருஜி மற்றும் காங்கிரஸை சிறுமைப்படுத்த நேதாஜியை பயன்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக காந்திஜி மற்றும் நேருஜியுடன் நேதாஜி காங்கிரஸில் இருந்துள்ளார். கருத்து வேறுபாடுகள் இருப்பினும் நேரு மற்றும் நேதாஜி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர்” என்று சந்திரகுமார் போஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், “அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றை யாரும் திரிக்கக் கூடாது” என்றும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகையும் இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத், “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என்று கேள்வி எழுப்பினார். இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
No one should distort history for their political ambition! @narendramodi @AmitShah @JPNadda @KanganaTeam pic.twitter.com/x5hHXDGk6O
— Chandra Kumar Bose (@Chandrakbose) April 7, 2024