சென்னை: “நாடறிந்த ஒரு தலைவரை, எல்லைப் போராட்ட வீரரை, சிலம்புச்செல்வரை அவருடைய பெயரைப் பயன்படுத்திக் கொண்டு, அவருடைய கதையில்லையென்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என ‘மா.பொ.சி’ படக்குழுவுக்கு அவரது ம.பொ.சிவஞானம் பேத்தி கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்னும் ம.பொ.சியைப் பலர் மா.பொ.சி (தவறே எனினும்) என்றும் அழைக்கின்றனர். உச்சரிக்கையில் குறில் நெடிலாகி அதுவே எழுத்தாகும்போது நேரும் தவறு. மா.பொ.சி என்றாலும், அவருடைய உருவமே நினைவிலெழும்.
போஸ் வெங்கட் இயக்கத்தில் மா.பொ.சி என்றொரு போஸ்டரைப் பார்த்தேன். தமிழ் இயக்குநர்களுக்கு ஏன் இந்த கற்பனை வறட்சியென்று நினைத்தேன். மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானமாம். மாங்கொல்லை மயிலாப்பூரிலிருக்கும் ஒரு பகுதி; பொன்னரசனும் பொன்னுசாமியும்; கடைசிப் பெயர் சிவஞானமே. முகத்தில் மரு வைத்து மறைத்தாலும் மறைக்க முடியாதவராயிற்றே அவர் .
தமிழுக்குத் தொண்டாற்றியவர்களை நீங்கள் மதிக்கவே வேண்டாம்; ஆனால் ஏன் இப்படி அவமதிக்கிறீர்கள்? நாடறிந்த ஒரு தலைவரை, எல்லைப் போராட்ட வீரரை, சிலம்புச்செல்வரை அவருடைய பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, அவருடைய கதையில்லையென்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவருடைய குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று தெரியாதா? நண்பர்கள், இதனைப் பகிர்ந்து உடனிற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மா.பொ.சி திரைப்படம்: போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘மா.பொ.சி’ படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். சித்துகுமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டைட்டில் விரிவாக்கமாக ‘மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் வசனங்களை சுகுணா திவாகர் எழுதியுள்ளார். இப்படத்தின் முதல் தோற்றத்துடன் கூடிய வீடியோவை படக்குழு அண்மையில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ம.பொ.சி. பற்றி: ஆந்திராவுடன் இணைய இருந்த திருத்தணியை தமிழகத்தோடு இணைப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் ம.பொ.சி. தமிழக அரசின் மேலவைத் தலைவராக இருந்துள்ளார். மேலும் எண்ணற்ற நூல்களை எழுதியவரும், தமிழறிஞருமான ம.பொ.சி. பெயரில் ‘மா.பொ.சி’ என தலைப்பிடப்பட்டு தமிழில் விமல் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு அவரது பேத்தி கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.