பிரபலங்கள், உச்ச நட்சத்திரங்கள் பலருக்கும் ஆஸ்தான ஹேர் ஸ்டைலிஸ்டாக இருப்பவர் ஆலிம் ஹக்கிம்.
‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி, ‘அனிமல்’ படத்தில் ரன்பீர் கபூர், இப்போது ஐபிஎல்’லில் விளையாடிக்கொண்டிருக்கும் விராட் கோலியின் ஹேட் ஸ்டைலை வடிவமைத்ததும் இவர்தான். தோனிக்கும் இவர்தான் ஹேர் ஸ்டைலிஸ்ட். இப்படி உச்ச நட்சத்திரங்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலருக்கும் ஹேர் ஸ்டைலிஸ்டாக இருந்து வருபவர் ஆலிம் ஹக்கிம். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், பிரபலங்களின் ஹேட் ஸ்டைல் குறித்தும் அதற்குத் தான் வாங்கும் பணம் குறித்தும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “சமீபத்தில் வெளியான படங்களான ‘வார்’ படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ‘அனிமல்’ ரன்பீர் கபூர், ‘கபீர் சிங்’ ஷாகித் கபூர், ‘சாம் பகதூர்’ விக்கி கௌஷல், ‘ஜெயிலர்’ ரஜினிகாந்த், ‘பாகுபலி’ பிரபாஸ் எனப் பலருக்கு ஹேர் ஸ்டைலிஸ்டாக இருந்திருக்கிறேன். உச்ச நட்சத்திரங்கள் பலருக்கும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஹேர் ஸ்டைலிஸ்ட் நான்தான்.
சமீப கால இந்திய சினிமாவில் 98% படங்களுக்கு நான்தான் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக பணியாற்றியிருக்கிறேன். குறைந்தபட்சமாக ஒரு லட்சம் முதல் சம்பளமாக வாங்குகிறேன். பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலருக்கும் 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் தான் ஹேர் ஸ்டைலிஸ்ட். அவர்களும் என்னை மாற்றியதில்லை. அவ்வளவு நம்பிக்கையுடன், அர்பணிப்புடன் வேலை செய்திருக்கிறேன்” என்றார்.
மேலும், விராட் கோலியின் இந்த ஐபிஎல் ஹேர் ஸ்டைல் குறித்துப் பேசியவர், “ஐபிஎல் நடப்பதால் விராட் கோலிக்காக புது ஹேர் ஸ்டைலைச் செய்தோம். அவரது புருவங்களில் ஒருவித ஸ்டைல் செய்து பார்த்தோம். ஹேர் ஸ்டைலிங்கில் மிகுந்த ஆர்வமுடையவர் விராட். எப்போது வந்தாலும், ‘இதைச் செய்து பார்க்கலாம், அடுத்து இந்த ஹேர் ஸ்டைல் வைக்கலாம்’ எனச் சொல்வார். இப்போது இருக்கும் அவரது ஹேர் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது” என்றார்.
+ There are no comments
Add yours