சென்னை: “தண்ணீர் கேன்களை விற்றேன், ரியல் எஸ்டேட் துறையில் வேலை செய்தேன், ஓட்டல்களில் வேலை செய்தேன். எனக்கு 2014-ல் இயக்குநராகவும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையில் 10 வருடம் போராடியிருக்கிறேன்” என கன்னட இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சினிமா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். திரையுலகத்துக்குள் நுழைய வேண்டும் என்பதுதான் என் கனவு. ஆனால், அப்போது திரையரங்குக்குச் சென்று ஒரு படம் பார்க்கக் கூட என்னிடம் பணம் இருக்காது.
குடும்பச் சூழ்நிலை காரணமாக என் அப்பாவிடமும் காசு கேட்க முடியாது. அதனால், நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போதே, கிடைத்த எல்லா வேலைகளையும் செய்தேன். தண்ணீர் கேன்களை விற்றேன், ரியல் எஸ்டேட் துறையில் வேலை செய்தேன், ஓட்டல்களில் வேலை செய்தேன். இந்தப் பணத்தை வைத்து சினிமாவுக்குள் நுழையலாம் என்று நம்பினேன்.
அந்த சமயத்தில் எனக்கு எந்த தொடர்பும் சினிமாவில் இல்லை. அப்போது ஒரு கன்னட நடிகரின் வாழ்க்கைக் கதையைப் படித்தேன். அவர் உதவி இயக்குநராக இருந்து நடிகராக வளர்ந்ததைத் தெரிந்து கொண்டதும் நானும் ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் முடித்தேன்.
பின்பு, உதவி இயக்குநராக ஆறேழு வருடங்கள் வேலைப் பார்த்தேன். அதன்பின் நடிகரானேன். 2004-ம் ஆண்டு கன்னட திரையுலகிற்குள் நுழைந்தேன். எனக்கு 2014-ல் இயக்குநராகவும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையில் 10 வருடம் போராடியிருக்கிறேன்” என்று கூறினார்.
கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘ரிக்கி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ரிஷப் ஷெட்டி. அடுத்து அவரது இயக்கத்தில் வெளியான ‘க்ரிக் பார்டி’ (Kirik Party) ரசிகர்களிடையே கவனம் பெற்றது. கடந்த 2022-ம் ஆண்டு ‘காந்தாரா’ படம் மூலம் இந்திய அளவில் இயக்குநராகவும், நடிகராகவும் கவனம் பெற்றார் ரிஷப். அடுத்து ‘காந்தாரா 2’ படத்தை இயக்கி வருகிறார்.