சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘டியர்’ (DeAr) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறட்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘டியர்’. ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் இடம்பெறும் பாடலொன்றை ராப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதி, பாடியிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படம் ஏப்ரல் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – கிரிக்கெட்டர் அஸ்வின் வாய்ஸ் ஓவரில் தொடங்குகிறது ட்ரெய்லர். தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளரான ஜி.வி.பிரகாஷுக்கு ஐஸ்வர்யா ராஜேஷுடன் திருமணம் நடக்கிறது. ஐஸ்வர்யாவுக்கு தூங்கும்போது குறட்டை விடும் பிரச்சினை இருப்பது திருமணத்துக்குப் பின் தெரிகிறது.
இதையடுத்து இவர்களது மண வாழ்வில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. அதேசமயம் காமெடியாகவும் காட்சிகள் நகர்கிறது. “பொண்ணுங்கல்லாமா குறட்ட விடுவாங்க” என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. அண்மையில் வெளியான ‘குட் நைட்’ படத்தில் நாயகனுக்கு குறட்டை பிரச்சினை இருக்கும். இதில் பெண்ணுக்கான குறட்டை பிரச்சினை பேசப்பட உள்ளது.
‘சிங்கத்தின் கர்ஜனை’, ‘யானையோட பிளிறு’ என மருத்துவரிடம் ஜி.வி.பிரகாஷ் சொல்லும் இடம், ‘கல்யாணத்துக்கு அப்றம் தான் உங்க முகம் ஃப்ரஷ்ஷா இருக்கு’ என்ற வசனங்கள் படம் காமெடியாக உருவாகியுள்ளதை உறுதி செய்கிறது. ஜி.வி.பிரகாஷுக்கு இந்தப் படம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ட்ரெய்லர் வீடியோ: