ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்துக்கு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி 500 கோடி பட்ஜெட்டில் ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
முதலில் ஆலியா பட் சீதையாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் அது மறுக்கப்பட்டது. இந்தப் படத்தை மது மண்டனா, அல்லு அரவிந்த் இணைந்து பான் இந்தியா முறையில் தயாரிக்கின்றனர். மூன்று பாகங்களாக உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மானும், பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளரான ஹான்ஸ் ஜிம்மரும் இணைந்து இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் பாலிவுட் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ஹான்ஸ் ஜிம்மர் ‘ராமாயணம்’ திரைப்படம் மூலம் இந்தியத் திரைப்படத் துறையில் அறிமுகமாகத் தயாராகி இருக்கிறார். உலக அளவில் இந்திய புராணக்கதைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அதற்காக எப்போதும் நிதேஷ் திவாரி குரல் கொடுத்து வருகிறார். ஹான்ஸ் ஜிம்மரும், ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணிபுரிவதற்காக ஒப்புதல் அளித்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.
ஹாலிவுட் இசையமைப்பாளரான ஹான்ஸ் ஜிம்மர் ‘லையன் கிங்’, ‘க்ளாடியேட்டர்’, ‘இன்சப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘டன்கிரிக்’, ‘ட்யூன்’, ‘தி டார்க் நைட்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் ‘தி லையன் கிங்’ மற்றும் ‘டியூன்’ படங்களுக்காக ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours