தமிழ் சினிமா பேசத் தொடங்கிய, ஆரம்ப காலகட்டமான 1931ல் இருந்து சில வருடங்கள், புராதன, இசை, இதிகாச, வரலாற்று கதைகள் தான் அதிகம் உருவாகின. அதை மாற்றி தமிழில் வெளியான முதல் சமூக படம் ‘மேனகா’. வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு டி.கே.எஸ் சகோதரர்கள் இதை நாடகமாக நடத்தினார்கள். வரவேற்பைப் பெற்ற நாடகம் அப்படியே திரைப்படமானது.
ராஜா சாண்டோ இயக்கிய இந்தப் படத்தில் டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, டி.கே.முத்துசாமி, எம்.எஸ்.விஜயாள், கே.டி.ருக்மணி, எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.ஆர்.ராமசாமி என பலர் நடித்தனர். டி.கே.முத்துசாமி விதவைப் பெண்ணாக நடித்தார். அவர் நடிப்பு பேசப்பட்டது.
திருப்பூரைச் சேர்ந்த சோமசுந்தரம் தனது பார்ட்னர் எஸ்.ஏ.முகைதீன் (பின்னர் ஜுபிடர் பிக்சர்ஸை தொடங்கியவர்கள்) மற்றும் 8 பேருடன் இணைந்து, ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் சார்பில்இந்தப் படத்தைத் தயாரித்தனர். சம்பளப் பிரச்சினை காரணமாகடி.கே.எஸ். சகோதரர்களிடம் இருந்து ஏற்கெனவே பிரிந்த என்.எஸ்.கிருஷ்ணனை இந்தப் படத்துக்காக அழைத்து வந்தனர். ‘மேனகா’வுக்காக அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் ரூ.600. அவர், சாமா ஐயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
பொறாமை கொண்ட சிலரின் செயல்களால் பிரிந்த ஜோடி, பலவித போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் எப்படி இணைகிறது என்பது கதை. இதன் திரைக்கதையைப் பிரபல நாடக இயக்குநரும் தமிழ்த் திரைப்பட முன்னோடியுமான எம்.கந்தசாமி முதலியார் எழுதினார். மும்பையில் (அப்போது பம்பாய்) உள்ள ரஞ்சித் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது.
படத்தில் ஒரு காட்சியில் என்.எஸ்.கிருஷ்ணனையும் அவருடன் நடிக்கும் பெண்ணையும் சேர்த்துக் கட்ட வேண்டும். இயக்குநர் எவ்வளவோ சொல்லியும் உடன் நடிக்கும் பெண்ணைத் தொட மறுத்துவிட்டார் என்.எஸ்.கே. அப்போது படக்குழுவினர் அனைவரும் சிரித்ததாகச் சொல்வார்கள். அப்போதிருந்துதான் ராஜா சாண்டோவுக்கும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் நட்பு தொடங்கியது.
1935-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் வெற்றி பெற்று சமூக படங்கள் அதிகரிக்கத் தொடங்கின. என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமான படம் இது. அந்த காலகட்டத்தில் ஒரு படத்தை முடிக்க ஆறு மாதம் எடுத்துக்கொண்ட போது, இந்தப் படத்தை மூன்றே மாதத்தில் முடித்தது அப்போது பேசப்பட்டது.