சிறுவயதில் முகத்தில் ஏற்பட்ட தீக்காயத்தின் தழும்பால் தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறார் அரவிந்த் (தீரஜ்). அரவிந்த்தின் காதலை பாரு (ஸ்மிருதி வெங்கட்) ஏற்றுக்கொள்ள, அவரின் வீட்டிற்கு வருகிறார். அதேநேரம், ‘காட்’ஸ் ஆர்மி’ என்கிற கடவுளின் உலகத்திலிருந்து வரும் ரைட் (முனீஷ்காந்த்தின் குரல்), லெஃப்ட் (காளி வெங்கட்டின் குரல்) என்ற தேவதை பொம்மைகள் இரண்டும் சேர்ந்து, அரவிந்த்தின் வாழ்நாள் முடிந்துவிட்டதாகத் தவறுதலாக நினைத்து, அவரின் உயிரை எடுத்துவிடுகின்றன. எதிர்பாராதவிதமாக அரவிந்த்தின் சடலமும் காணாமல் போகிறது.
தற்காலிகமாக, அரவிந்த்தின் உயிரானது, அவரைப் போலவே, அதேநேரம் முகத்தில் தழும்பற்று இருக்கும் ராஜா (தீரஜ்) என்பவரின் உடலுக்குச் செல்கிறது. ராஜாவிற்குள் இருக்கும் அரவிந்த், லெஃப்ட், ரைட் ஆகியோர் சேர்ந்து, தொலைந்த சடலத்தைத் தேட, பல பூகம்பங்கள் வெடிக்கின்றன. இறுதியில், அரவிந்த் தன் உடலைக் கண்டடைந்தாரா, அரவிந்த்தும் பாருவும் சேர்ந்தார்களா போன்ற கேள்விகளுக்கான பதிலை காமெடி கலாட்டாவாகச் சொல்ல முயன்றிருக்கிறது மீரா மஹதி இயக்கியிருக்கும் இந்த ‘டபுள் டக்கர்’. (யெஸ்! அதே ‘அதிசயப் பிறவி’ வைப்ஸ்தான்!)
காதல், டூயட், பந்தா காட்டுவது, காமெடி ஆகிய இடங்களில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்து பாஸ் ஆகிறார் தீரஜ். முக்கியமாக, காமெடி காட்சிகளில் இவரின் ஆற்றாமை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. மறுபுறம், தாழ்வுமனப்பான்மையில் தவிக்கும் தருணங்களுக்கு இன்னுமே மெனக்கெட்டிருக்கலாம். கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை ‘மட்டும்’ செய்திருக்கிறார். முனீஷ்காந்த் மற்றும் காளி வெங்கட்டின் குரல்கள் படத்திற்குப் பெரிய பலம். குரல்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரியும், அவர்களின் கவுன்ட்டர்களும் படத்திற்கு டபுள் ‘ப்ளஸ்’.
ஷா ரா – சுனில் ரெட்டி கூட்டணி, மன்சூர் அலிகான் – ஜார்ஜ் – டெடி கோகுல் கூட்டணி, கோவை சரளா கூட்டணி, கருணாகரன் – யாஷிகா ஆனந்த் கூட்டணி, எம்.எஸ்.பாஸ்கர் கூட்டணி என எக்கச்சக்க காமெடி நடிகர்களுடன் பல முனை காமெடி போட்டி நடக்கிறது. இதில் ஷாரா, சுனில் ரெட்டி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கிடைத்த எல்லா காட்சிகளிலும் சிக்ஸர் அடிக்க, மற்றவர்கள் பாஸ் மார்க் பெற்றுத் தப்பிக்கிறார்கள்.
காதல் – ஃபேன்டஸி படத்திற்குத் தேவையான ‘ரிச்னஸ்ஸை’ கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு கொடுத்திருக்கிறது. காமெடி காட்சிகளுக்குள் காட்டிய நேர்த்தியையும் கோர்வையையும், மற்ற காட்சிகளில் மிஸ் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் வெற்றிவேல் ஏ.எஸ். வித்யாசாகரின் இசையில் இரண்டு பாடல்களும் ரசிக்க வைக்கவில்லை. ஆனால், பின்னணி இசையில் விட்டதைப் பிடித்திருக்கிறார். ரகளையான காட்சிகளிலும், சேஸிங் காட்சிகளிலும் தன் பெயரை ஆழமாகப் பதிக்கிறார்.
அரவிந்த் கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொள்வதற்கு முன்பே, ஷா ரா – சுனில், ‘காட்’ஸ் ஆர்மி என்ற தேவதை பொம்மைகள் உலகம், கருணாகரன் – யாஷிகா ஆனந்த், மன்சூர் அலிகான், காவல் ஆய்வாளர் கோவை சரளா எனப் பல்வேறு கிளைக்கதைகளும் கதாபாத்திரங்களும் கதைக்குள் வந்துவிடுகிறார்கள். இதனாலேயே திரைக்கதை ஃபெவிகால் போட்டு ஒட்டப்பட்ட உணர்வைத் தருகிறது. ‘தன் சடலத்தைத் தேடும் அரவிந்த்’ என்ற மையக் கதை மட்டும், இந்த இடர்பாடுகளுக்குள் சிக்கி எப்படியோ தப்பிக்கிறது.
ஷா ரா கூட்டணியின் காமெடிகள், ரோலக்ஸ் சூர்யா, ஏஜென்ட் விக்ரம், கபாலி ரஜினி எனப் பல கெட் அப்கள் போடும் தேவதை பொம்மைகள், அவற்றின் கவுன்ட்டர்கள் என ஆங்காங்கே சிரிக்க வைத்துவிடுவதால், முதல் பாதி மட்டும் காமெடிகளால் கரை சேர்கிறது.
‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக, முதல்பாதியில் தொடங்கி வைக்கப்பட்ட எக்கச்சக்க கதாபாத்திரங்களும் கிளைக்கதைகளும் இரண்டாம் பாதிக்கு வினையாக மாறியிருக்கின்றன. மீண்டும் மையக் கதையிலிருந்து விலகி, யாஷிகா ஆனந்த் கதை, கருணாகரன் கதை, மன்சூர் அலிகான் கதை எனக் கிலோ கணக்கான கிளைக்கதைகளை விரிக்கிறது திரைக்கதை.
‘என்னைக்குமே நம்ம உடம்புதான் நமக்கு அழகு’ என்ற கருத்தை முன்வைக்க முயன்ற மையக்கதை, அதை வெறும் ஒரு வரி வசனத்தில் மட்டுமே பேசியிருக்கிறது. “இன்னுமாப்பா இந்தப் படத்துல லாஜிக் பாத்துட்டிருக்கீங்க?” எனப் படத்திற்குள்ளேயே பொறுப்புத் துறப்பு வசனம் வந்தாலும், சில லாஜிக் ஓட்டைகளை எட்டிப் பார்த்தால், இல்லை, இல்லை எண்ணிப் பார்த்தாலே தலை சுற்றுகிறது. பேன்டஸி படம் என்றாலும் அந்த உலகத்துக்கு என நிர்ணயிக்கப்பட்ட விஷயங்களையேனும் சரியாக அணுகியிருக்கலாம்.
கோவை சரளா – மன்சூர் அலிகான் தொலைபேசி உரையாடல், போன் பேசிக்கொண்டே இருக்கும் மன்சூர் அலிகானின் அடியாள், முனீஸ்காந்த் – காளி வெங்கட் கூட்டணி பாருவைக் காப்பாற்றச் செய்யும் செயல்கள், ‘டெம்பிள் ரன்’ பாணியிலான அனிமேஷன் காட்சிகள், சமகால சமூக வலைத்தள கன்டென்ட்களைத் தூவிவிட்டது என சில யோசனைகள் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கின்றன.
முக்கியமாக, பல அவதாரங்கள் எடுக்கும் தேவதை பொம்மைகளுக்கான விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் அனிமேஷன் பணிகள், அவை பேசும் வசனங்கள் போன்றவை படத்தின் தனித்துவமாக அமைந்திருக்கின்றன. அதேநேரம், மனப்பிறழ்வுக்குள்ளானவர்கள் தொடர்பான காட்சிகளைக் கூடுதல் சமூகப் பொறுப்புடன் கையாண்டிருக்கலாம்.
தேவதை பொம்மைகள், `உயிர்’ மாறாட்டம், சேரத் துடிக்கும் காதல், துரத்தும் பெரிய ரவுடி என இறங்கி விளையாடத் தெளிவான கதை இருந்தும், எக்கச்சக்கமான கிளைக்கதைகளாலும் கதாபாத்திரங்களாலும் இந்த `டபுள் டக்கர்’ ஒரு ட்ரபிள் டக்கராக மாறியிருக்கிறது.
+ There are no comments
Add yours