சென்னை: ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் ராமாயணக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகும் படத்தில் ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை 3 பாகங்களாகத் திரைப்படமாக இயக்க இருக்கிறார். இதில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக யஷ்ஷும் நடிக்க இருக்கின்றனர். சீதையாகச் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். முதலில் ஆலியா பட் சீதையாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் விலகியதால், சாய் பல்லவி நடிக்கிறார்.
இந்தப் படத்தை மது மன்டனா, அல்லு அரவிந்த் இணைந்து பான் இந்தியா முறையில் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளரான ஹான்ஸ் ஸிம்மர் இப்படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த ஹான்ஸ் ஸிம்மர்? – ஜெர்மனியைச் சேர்ந்த 66 வயதானவர் ஹான்ஸ் ஸிம்மர். 1980 முதல் இசையமைத்து வருகிறார். 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட்டில் வெளியான ‘லையன் கிங்’, ‘க்ளாடியேட்டர்’, ‘இன்சப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘டன்கிரிக்’, ‘ட்யூன்’, ‘தி டார்க் நைட்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
‘தி லையன் கிங்’, ‘ட்யூன்’ படங்களுக்காக இவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தவிர, 3 முறை கோல்டன் குளோப் விருதை பெற்றுள்ளார். இவர் இந்தியப் படத்துக்கு இசையமைப்பது இதுவே முதன்முறையாகும்.