சென்னை: விமல் நடிக்கும் ‘மா.பொ.சி’ படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘மா.பொ.சி’ படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். சித்துகுமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டைட்டில் விரிவாக்கமாக ‘மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் வசனங்களை சுகுணா திவாகர் எழுதியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றத்தையும், அறிமுக வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் தோற்றத்தை பொறுத்தவரை விமல் சாக்பீஸ் கொண்டு எழுதுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் ஆசிரியராக நடித்துள்ளதாக தெரிகிறது.
அறிமுக வீடியோ 3.14 நிமிடங்கள் ஓடுகிறது. இதில் தமிழர்களின் வரலாறு பேசப்படுகிறது. “ஆங்கிலேயர்கள் பொருளாதார ரீதியாக நம்மை சுரண்டினாலும், அரசியல் ரீதியாக ஒடுக்கினாலும், ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவத்தையும், கல்வியையும் கொண்டு சேர்த்தார்கள்”, ‘மெக்காலே தான் குருகுல கல்வியை ஒழித்து பொதுக்கல்வி முறையை கொண்டுவந்தார்” போன்ற வசனங்கள் கல்வியின் முக்கியத்துவத்தை முன்னிட்டு இப்படம் உருவாகியுள்ளதை உறுதி செய்கிறது.
மேலும் ஆதிக்கம் – அடிமை – அதிகாரம், குலத்தொழில், தீண்டாமை, சத்துணவுத் திட்டம், என வரலாற்றை பேசுகிறது வீடியோ. இறுதியில் “மாங்கொல்லை கிராமத்தில் ஆதிக்க வர்க்கத்தினர் மக்களை படிக்க விடாமல் தடுத்தனர். மூட நம்பிக்கையிலும் அச்சத்திலும் முடங்கி கிடந்த மாங்கொல்லை கிராமத்தில்…” என்பதுடன் வீடியோ நிறைவடைகிறது.
இப்படியான கிராமத்தில் ஆசிரியரான விமல் ஏற்படுத்தும் மாற்றங்கள் படமாக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக விமல் ஆசிரியராக நடித்த ‘வாகை சூட வா’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்துக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது அவருக்கு வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் தேர்ந்த கதையை அவர் தேர்வு செய்துள்ளார். அறிமுக வீடியோ:
+ There are no comments
Add yours