சென்னை: “எனக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி… ‘பையா’ டைட்டிலுக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியாது. பையா 2 படத்துக்கான கதையை கார்த்தியிடம் சொல்லி விட்டேன். தோற்றத்தில் ஒரு மெச்சூரிட்டி வந்துவிட்டதால், பையா கதாபாத்திரத்தை மீண்டும் பண்ண வேண்டுமா என யோசிக்கிறார்” என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் கடத 2010-ம் ஆண்டு வெளியான ‘பையா’ படம் ஏப்ரல் 11-ம் தேதி ரீ-ரலீஸ் செய்யப்பட உள்ளது. இதையொட்டி படத்தின் நினைவுகளை பகிர்ந்துகொண்ட இயக்குநர் லிங்குசாமி, “18 நாட்களில் ‘பையா’ திரைப்படத்தின் கதையை தயார் செய்தேன். ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த கார்த்தியிடம் போய் இந்த கதையை கூறினேன். முதல் காட்சியில் சிரிக்க ஆரம்பித்தவர் முழு கதையையும் கேட்டு கலகலகவென்று சிரித்தபடி இதை நாம் செய்வோம் என்று கூறினார்.
இந்த கதை உருவாகும்போதே ‘பையா’ என்கிற டைட்டிலும் கிடைத்து விட்டது. ஏற்கனவே கார்த்திக்கு ‘பருத்திவீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என கொஞ்சம் பெரிய பெரிய வார்த்தைகளில் டைட்டில் இருக்கிறது. எனவே சிறியதாகவும், கூலாக இருக்க வேண்டும் என யோசித்து வைத்த டைட்டில் தான் ‘பையா’. இதற்கான அர்த்தம் என்னிடம் கேட்டார்கள். அப்போதும் சரி இப்போதும் சரி பையாவுக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியாது.
‘அடடா மழை டா’ பாடல் காட்சியை சாலக்குடியில் படமாக்கிய போது அடுத்தடுத்து உடைகளை மாற்ற வேண்டும் என்றால் கொஞ்சம் தூரத்தில் இருக்கும் கேரவனுக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்கு நேரமாகும் என்பதால் இரண்டு பெண்களை அழைத்து சேலையை மறைப்பாக பிடிக்க சொல்லி எந்த தயக்கமும் இன்றி உடனடியாக உடை மாற்றிக் கொண்டு வந்து நடித்தார்.
படத்தில் தமன்னா நடிக்கும் போது அவருக்கு 18 வயது தான். அவருக்கு முதல் பெரிய ஹிட் பையா தான். பருத்திவீரன் பாடி லாங்குவேஜில் இருந்து மாறுவதற்கு கார்த்தி ரொம்பவே சிரமப்பட்டார். ரசிகர்களிடம் நடத்திய சர்வேயில் ‘பையா’ ரீ ரிலீஸுக்குத்தான் அதிக டிமாண்ட் இருந்தது.
பையா 2 படத்திற்கான கதையை கார்த்தியிடம் சொல்லி விட்டேன். தோற்றத்தில் ஒரு மெச்சூரிட்டி வந்துவிட்டதால், பையா கதாபாத்திரத்தை மீண்டும் பண்ண வேண்டுமா என யோசிக்கிறார். ‘பையா 2’ படத்தில் கார்த்தி சார் நடிக்கவில்லை என்றால் வேறு ஒரு ஹீரோவை வைத்து படமாக்கும் விதமாகத்தான் அதை எழுதியுள்ளேன். ஆனால் ‘பையா 2’விலும் கார் இருக்கும். ஆனால் வேறு காதலர்கள் இருப்பார்கள்” என்றார்.