திரை விமர்சனம்: நேற்று இந்த நேரம் | netru indha neram review

Estimated read time 1 min read

கல்லூரி நண்பர்கள் 7 பேர் ஊட்டிக்குச் சுற்றுலா வருகின்றனர். அவர்களில் நிகில் (ஷாரிக்)–ரித்திகா (ஹரிதா) காதலர்கள். நிகில் திடீரென காணாமல் போகிறார். தேடியும் அவர் கிடைக்காத நிலையில் வேல்ராஜ் (ஆனந்த்) என்ற காவல் அதிகாரி விசாரிக்க வருகிறார். 6 பேரிடம் நடத்தும் விசாரணை மூலம் நிகிலுக்கு என்ன நடந்தது என்பதை அவர் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பது கதை.

எடுத்த எடுப்பிலேயே விசாரணையிலிருந்து தொடங்கும் படம்,முதல் பாதி முழுவதும் அந்த7 பேரின் வாழ்க்கைப் பக்கங்களைச் சிறிது சிறிதாக விரித்துக்காட்டுகிறது. அதில் சுவாரஸ்யங்கள் நிறைந்திருந்தாலும் திரைக்கதை நகர்வின் வேகம் பொறுமையைச் சோதிக்கிறது. இதற்கு நேர்மாறாக இரண்டாம் பாதியில் வரும் திடுக்கிடல்களும் திருப்பங்களும் எதிர்பாராத கிளைமாக்ஸும் ‘பிரில்லியன்ட்’ என்று சொல்ல வைக்கின்றன.

குற்றம் இழைத்தோர் தரப்பின் நியாயத்தையும் குற்றம் இழைக்கத் தூண்டியவரின் குணநலன்களையும் தர்க்க ரீதியாக அமைத்தவிதம் அபாரம். அதேநேரம், காணாமல் போன நண்பனைத் தேட எடுத்த முயற்சி, சுற்றுலா வந்த நண்பர்களின் பெற்றோர்களைக் காவல் துறைத் தொடர்பு கொள்ளாமல், ரிசார்ட்டிலேயே வைத்தது ஆகியவற்றுக்குத் தர்க்கங்களை உருவாக்காமல் போனது, திரை அனுபவத்தைக் குறைக்கிறது.

ஷாரிக் மட்டுமே தெரிந்த முகமாக இருக்க, மற்ற கதாபாத்திரங்கள், புதுமுகம் என்று கூற முடியாதஅளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ரித்திகாவாக வரும் ஹரிதா, எக்கச்சக்கமாக ஸ்கோர் செய்கிறார். ஷாரிக், தனதுகதாபாத்திரத்தின் முரண்களை அழகாக நடிப்பில் கொண்டு வருகிறார். ரோகித்தாக வரும் திவாகர் குமார், புலனாய்வு அதிகாரி வேல்ராஜாக வரும் ஆனந்த் ஆகியோரும் அழகான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஊட்டிக்கு வந்த பிறகு என்ன நடந்தது என்பதைக் கூறும் ஆறு பேருடைய வாக்குமூலத்தின் வழியாக விரியும் காட்சிகளில் வரும் ஒரே இடங்களை ‘சிக்னேச்சர் ஷாட்’களாக அழுத்தமாகப் பதிய வைத்துவிடுகிறார் ஒளிப்பதிவாளர் விஷால். இசையமைப்பாளர் கெவின்.எம். பாடல்களில் தந்த ஈர்ப்பைப் பின்னணியில் தரத் தவறிவிட்டார். அழுத்தமான கதையும்வலுவான திரைக்கதையும் அமைத்தால் புதுமுகங்களைக் கொண்டே சுவாரஸ்யமான ‘மர்டர் மிஸ்ட்ரி’ படத்தைக் கொடுக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தப் படம்.

'+k.title_ta+'

'+k.author+'