பிளாஷ்பேக் : ரியல் ஹீரோ ஆனந்தன்
01 ஏப், 2024 – 15:31 IST
சினிமாவில் டாப்பில் உள்ள நடிகர்கள் எல்லாம் சண்டை காட்சியில் பின்னி பெடலெடுப்பார்கள். ரசிகர்களும் அதை பார்த்து விசிலடித்து, கைதட்டி ரசிப்பார்கள். ஆனால் நிஜத்தில் அந்த சண்டை காட்சிக்கு பொறுப்பானவர்கள் நிஜமான சண்டை கலைஞர்கள். நடிகர்களின் டூப்புகள்.
சண்டை காட்சியிலும் டூப் இல்லாமல் நடித்த நடிகர்கள் மிகவும் அபூர்வம். அந்த ஆபூர்வங்களில் ஒருவர் சி.எல்.ஆனந்தன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நடனம், சண்டை கலைகளை முறையாக கற்று வந்தவர் ஆனந்தன். குறிப்பாக வாள் சண்டையில் கைதேர்ந்தவர். அவரின் இந்த திறமையை கணித்த சிட்டாடல் பிலிம்ஸின் அதிபர் ‘விஜயபுரி வீரன்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அன்றைக்கு வாள் சண்டையில் பிரபலமான இருந்த எம்ஜிஆரையே அசர வைத்தது விஜயபுரி வீரனில் இடம் பெற்ற வாள்சண்டை. எம்.ஜி.ஆருக்கு போட்டியாக கருதப்பட்ட ஆனந்தன் பின்னாளில் நீரும் நெருப்பும், தனிப்பிறவி படங்களில் அவரோடு சேர்ந்து நடித்ததும், எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது முதல் ஆளாக போய் சேர்ந்ததும் தனி கதை.
ஆனந்தன் தான் நடித்த படங்களில் இடம்பெற்ற சண்டை காட்சி எதிலும் டூப் போட்டதில்லை. குறிப்பாக ‘காட்டுமல்லி’ என்ற படத்தில் புலியுடன் நேரடியாகவே சண்டை போட்டார். என்றாலும் ஆனந்தனின் நடன திறனுக்கான களம் சினிமாவில் அமையவில்லை. . ‘வீரத்திருமகன்’ படத்தில் இவர் பெண் வேடமிட்டு ஆடிய “வெத்தல போட்ட பத்தினி பொண்ணு…” என்ற பாடல் மிகவும் பிரபலம்.
கொங்கு நாட்டு தங்கம், யானை வளர்த்த வானம்பாடி மகன், நீயா நானா, நானும் மனிதன்தான், காட்டு மல்லி, அடுத்த வாரிசு, அந்த ஒரு நிமிடம், செந்தூரப் பூவே ஆகியவை ஆனந்தனின் குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும். இதில் ‘நானும் மனிதன்தான்’ படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.
ஆனந்தன் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அவர் சினிமாவிலும் நிஜ ஹீரோவாகவே இருந்தார்.
+ There are no comments
Add yours