சென்னை: தனது 48-வது வயதில் மறைந்திருக்கிறார் நடிகர் டேனியல் பாலாஜி. அவர் மறைந்தாலும் நடிப்பின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவரின் கதாபாத்திரங்கள் என்றும் நம்முடன் உறவாடிக் கொண்டிருக்கும்.
எதிரில் இருப்பதோ கமல்ஹாசன். இவருக்கோ ‘காக்க காக்க’ படம் மட்டுமே அடையாளம். வெள்ளித் திரையில் பெரிய முன் அனுபவமெல்லாம் இல்லை. ஆனால், ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் டேனியல் பாலாஜி வரும் மொத்த ஃப்ரேம்களிலும் கமலுக்கு டஃப் கொடுத்து நடித்திருப்பார். உண்மையில் கமல் ஒரு ஃப்ரேமில் இருக்கும்போது அவரைத் தாண்டி தனித்து தெரிவது கடினம். ஆனால், பாலாஜி தனது நுட்பமான நடிப்பால் அமுதன் கதாபாத்திரம் மூலம் அதனை சாத்தியப்படுத்தியிருப்பார்.
“எனக்குள்ள அடக்கி வைச்சிருந்த மிருகத்த… வெளியே கொண்டுவந்தாங்க” என ரத்தம் சொட்ட சொட்ட அவர் சொல்லும் ஃப்ளாஷ்பேக்கில் அப்படியொரு ஆக்ரோஷம் குடிகொண்டிருக்கும். பிரஞ்ச் தாடியும், நீண்ட முடியும் வைத்துக் கொண்டு கத்திப் பேசும் தொனியும், தனித்த உடல்மொழியும், சைக்கோத்தனத்துடனும் அட்டகாசம் செய்திருப்பார் டேனியல் பாலாஜி.
க்ளைமாக்ஸில், “எங்கள விட்ரு ராகவன்… விட்ரு.. நான் உலகத்துலையே சிறந்த டாக்டரா வருவேன். அவர் ரெண்டாவதா வருவான்” என பேசும் சிங்கிள் ஷாட் காட்சியின் இறுதியில் ‘சாகாவரம்’ என பேசியிருப்பார் பாலாஜி. உண்மையில் தனது கதாபாத்திரங்களின் வழியே ‘சாகாவரம்’ வரம் பெற்றிருக்கிறார்.
குறிப்பாக அந்தக் காட்சியில், “ஆராதனா எங்க?” என கமல் கேட்கும்போது, “பொதைச்சுட்டேன் சொல்றேன்லடா” என சொல்லும்போது நமக்கே கோபம் வரும். படம் நெடுங்கிலும் இருக்கும் அவரின் இந்த திமிரான உடல்மொழி அமுதன் கதாபாத்திரமாகவே வாழவைத்திருக்கும்.
அடுத்து ‘பொல்லாதவன்’ ரவி. கிஷோரின் தம்பியாக மருத்துவமனைக் காட்சியில், மூக்கு வரை நீளும் முடியை பரப்பிக்கொண்டு திமிறி நிற்பார். அவருக்கும் தனுஷுக்குமான ஃபேஸ்ஆஃப் காட்சிகளில் கோபத்தை விழுங்கி ஒதுங்கிப்போவார். துடிப்பான மெச்சூரிட்டியற்ற இளம் வயது ரவுடியை தன்னுள் வரித்துக்கொண்டு முன்கோபம், சொதப்பல், இணங்கிப்போகாத தன்மை ஆகியவற்றால் தனது கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருப்பார்.
டேனியல் பாலாஜியை பொறுத்தவரை, தன் எதிரில் இருக்கும் மகா நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கான திறமையான கலைஞன். அது கமல், தனுஷ், சூர்யா, விஜய் யாராக இருந்தாலும் அவர்களுடனான காட்சியில் தன்னை தனித்து காட்டும் வல்லமை அவரிடம் இருக்கும்.
அதேபோல ‘பைரவா’ படத்தில் முறுக்கிய மீசையோடு, “கோட்ட வீரன் முன்ன நின்னு பேசவே பயப்படுவானுவ” என நெல்லை தமிழில் விஜய்யை எதிர்கொண்டிருப்பார். “இதுல இருக்குற 6 புல்லட்ல ஒரு புல்லட்ல உன் பேர் இருக்கு” என விஜய்யை நோக்கி அவர் துப்பாக்கி நீட்டும் காட்சியில் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருப்பார்.
‘வட சென்னை’ படத்தில் தனுஷிடம் அவர் பேசும், ‘லைஃப்ப தொலைச்சிட்டீயேடா’ வசனம் மீம்களுக்கான எவர்கிரீன் டெம்ப்ளேட். ‘பிகில்’ படத்தில் சமாதானம் பேசும் காட்சியில், “பேசிட்டு இருக்கோம்… எந்திரிக்கிற உட்காருயா” என வில்லத்தனத்துடன் விஜய்யை நோக்கி பேசும் இடம் கவனம் பெற்றிருக்கும்.
டேனியல் பாலாஜி நடிக்கும் ஃப்ரேம்களில் அவரைத் தாண்டி யாராலும் ஸ்கோர் செய்துவிட முடியாதபடி உடல்மொழி, ஆக்ரோஷம், வில்லத்தனத்துடன் மொத்தக் காட்சியையும் தன்வசப்படுத்திவிடுவார். சமூக வலைதளங்களில் பலரும் அடுத்த ரகுவரனுக்கான தகுதி வாய்ந்த நடிகர் என அவரை புகழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமா அட்டகாசமான உறுதுணை நடிகர் ஒருவரை இன்று இழந்துவிட்டது. இருப்பினும் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் திரைகளில் வாழ்ந்துகொண்டிருப்பார் டேனியல் பாலாஜி. போய் வாருங்கள்!