வாய்ப்பு தேடி வரும் இளம் இயக்குநர், பாடாவதியான கதைகளைக் கேட்டுக் கேட்டு நொந்துபோயிருக்கும் தயாரிப்பாளரிடம் ஒப்புதல் வாங்க, நான்கு வித்தியாசமான கதைகளைச் சொல்கிறார். அந்தக் கதைகளை இயக்குநரின் பார்வையில் நான்கு குறும்படங்களாக ஒரு படமாக இணைத்துக் காட்டும் முயற்சியே இந்த `ஹாட் ஸ்பாட்’.
Happy Married Life:
ஆதித்யா பாஸ்கரும் கௌரி கிஷனும் காதலர்கள். தங்களின் காதல் குறித்து வீட்டில் தெரிவித்து திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய முடிவெடுக்கிறார்கள். அடுத்த நாள் அந்த உலகில் கணவன் மனைவியின் ரோல்கள் ரிவர்ஸாகி மனைவி குடும்பத்தலைவராகவும், கணவன் இல்லத்தலைவராகவும் மாறிவிடுகிறார்கள். இந்த மாற்றம் நிஜமானதுதானா, இதனால் ஆதித்யா பாஸ்கர் என்ன பாடம் கற்றார் என்பதே இந்த முதல் படத்தின் கதை.
Golden Rules:
சாண்டியும் அம்மு அபிராமியும் காதலிக்கிறார்கள். அவர்களின் வீட்டிற்கும் அது தெரியவந்து, அவர்களும் சம்மதிக்கிறார்கள். ஆனால், அதன் பின்னர்தான் தெரியவருகிறது இரண்டு குடும்பங்களும் நெருங்கிய சொந்தம் என்றும் சாண்டியும் அம்மு அபிராமியும் அண்ணன் – தங்கை முறை என்பதும்! இதற்கடுத்து அந்தக் காதலர்கள் என்ன முடிவு எடுத்தார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை.
Thakkali Chutney:
பத்திரிகையாளராகப் பணிபுரியும் ஜனனி, ஐடி துறையில் பணிபுரியும் சுபாஷைக் காதலிக்கிறார். ஒரு சர்ச்சையில் சிக்கி வேலைப் பறிபோகும் சுபாஷ், வருமானமின்றி தவிக்கிறார். பின்னர் ஒரு சூழலில் பணத்துக்காக ஆண் பாலியல் தொழிலாளியாக மாறுகிறார். நிறையப் பணம் சம்பாதிக்கத் தொடங்குகிறார். ஒரு நாள் எதிர்பாராதத் திருப்பமாக அவருக்கு ஒரு கஸ்டமர் அமைய, அதன் பிறகு அவர் வாழ்வில் நடக்கும் சிக்கல்களே இந்த மூன்றாவது கதை.
Fame:
ஆட்டோ ஓட்டுநரான கலையரசன் – சோபியா தம்பதியினரின் குழந்தைகள் இருவருக்கும் டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர, புகழும் தேடி வருகிறது. ஆனால் இந்த ரியாலிட்டி ஷோக்களின் இன்னொரு முகம் அந்தக் குழந்தைகளின் மனத்தில் நஞ்சை விதைக்கிறது. இதனால் கலையரசனின் மகள் பாதிக்கப்பட, அதற்கடுத்து அவர் எடுக்கும் முடிவே இந்தப் படத்தின் கதை.
முதல் கதையில் ரோல் ரிவர்ஸ் பாத்திரத்தில் நடித்துள்ள ஆதித்யா பாஸ்கரின் நடிப்பு ஓ.கே ரகம்தான். பெண் பார்க்கும் இடத்தில் கருத்தூசி போடும் இடத்தில் ஓவர் ஆக்டிங்கும் எட்டிப் பார்க்கிறது. நாயகி கௌரிக்கும் பெரிதாக வேலையில்லை. இரண்டாவது கதையில் 2 – 3 பிரேம்களில் மட்டும் வந்து போகிறார் சாண்டி. நாயகி அம்மு அபிராமிக்குச் சற்று கூடுதலான திரை நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரது நடிப்பில் குறையேதுமில்லை.
மூன்றாவது கதையில் ஆண் பாலியல் தொழிலாளியாக வரும் சுபாஷ் தனது நெகட்டிவ் பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். சுபாஷின் தவற்றை மன்னித்து ஒப்புக்கொள்வது போல வரும் இறுதி காட்சிகளில் முன்கூட்டியே அது பொய் என்று தெரியுமளவே ஜனனியின் நடிப்பிருக்கிறது. கடைசி படத்தில் உணர்வுபூர்வமான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கலையரசன். அவரது மனைவியாக நடித்துள்ள லட்சுமியும் குறை சொல்லமுடியாத நடிப்பைத் தந்துள்ளார். படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் குழந்தைகளிடம் இன்னும் சிறப்பான நடிப்பை வாங்கியிருக்கலாம்.
முதல் மூன்று கதைகளில் ஆண்களின் உலகத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை நையாண்டியாகச் சொல்லிவிட்டு, இறுதி கதையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை எமோஷனலாகவும் காட்ட முற்பட்டிருக்கிறார் இயக்குநர்.
முதல் கதையில் திருமணம் என்ற முறையே ஆண்களுக்குச் சாதகமான ஒரு ஆணாதிக்க நிறுவன அமைப்பு என்பதை ஆரம்பத்தில் சில காட்சிகள் வழியாக நையாண்டியாகக் கொண்டு சென்றவர், திடீரென ‘யூ’ டர்ன் எடுத்து வசனங்கள் மூலமாக வகுப்பெடுக்கத் தொடங்குகிறார். அதுவும் அதில் தீர்வாக மீண்டும் அந்தத் திருமணம் எனும் நிறுவன அமைப்புக்குள்ளே செல்லச் சொல்வது நகைமுரண்.
இரண்டாவது படத்திலும் பெண்கள் சமத்துவம், விடுதலை, ஆணாதிக்கம் என்று வசனங்கள் தொடர்கின்றன. ஆனால் அப்படியான வசனங்களை வைத்துவிட்டு ‘லெஸ்பியன்’ எனப் பொய் சொல்லி பிறகு தன் காதலனை அறிமுகம் செய்வது போன்ற காட்சிகள் தன்பாலின ஈர்ப்பாளர் குறித்து ஓர் அபத்தமான சித்தரிப்பைத் தருகிறது. இது இயக்குநரின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. படத்தின் முடிவிலும் யாரிடம் கேள்வி கேட்கிறார் என்ற புரிதல் இல்லாமல் முடிகிறது.
மூன்றாவது கதையான ‘தக்காளி சட்டினி’, “உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்டினியா?” என மீண்டும் ஆண்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வியாக இருக்கிறது. இங்கேயும் காட்சியாகப் படம் சொல்ல வரும் கருத்து முடிந்த பின்னரும் “ஏலே ஒடவா பாக்க…” என வகுப்பெடுக்கிறார்கள். ரெஸ்ட் ரூமில் தவறுதலாக சிசிடிவி மாட்டும் லாஜிக் எல்லாம் என்ன யோசனை என்றே தெரியவில்லை.
நான்காவது கதையான ‘Fame’ குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்கவிடுங்கள், டிவி ஷோக்கள் என்ற பெயரில் அவர்களுக்கு ஆபாசமான விஷயங்களைச் சொல்லித் தரவேண்டாம் என்ற பின்னணியைப் பேசுகிறது. இயக்குநரின் நோக்கம் என்னவோ சிறப்பானதுதான். ஆனால் அதை இன்னுமே பொறுப்புடன் அணுகியிருக்கலாம். குழந்தை பாலியல் வன்முறை காட்சியை ஆடியோ என்றாலும் இப்படியாகக் காட்சிப்படுத்தியிருப்பது நிச்சயம் சமூகப் பொறுப்பற்ற செயல். கதாபாத்திரங்களின் வலியைக் கடத்த எழுத்தை நம்பாமல் காட்சிகள் மூலம் அந்தத் தாக்கத்தை ஏற்படுத்த நினைத்திருப்பதே இந்தச் சிக்கலுக்கான காரணம்.
குறிப்பாக வசனங்கள் சர்ச்சையாக எழுதப்படுவதை விடத் தெளிவாக, சமூகப் பொறுப்புடன் எழுதப்படவேண்டும் என்பதே முக்கியம். ஆந்தாலஜி என்றவுடன் பொதுவான ஒரு `தீம்’மில் அந்தக் கதைகள் தொகுக்கப்படும். இங்கே அந்த `தீம்’ சர்ச்சை என்றளவில் மட்டுமே நம் மனத்தில் பதிகிறது.
தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் மற்றும் படத்தொகுப்பாளர் முத்தையன் பணிகளில் குறையேதுமில்லை. சதிஷ் ரகுநாதன், வான் இசையில் “உன் முன்னோர்கள் யாருமே முட்டாள்கள் இல்லை” என்ற பாடலும், அதை நாதஸ்வரத்தை வைத்துத் துள்ளலான பின்னணி இசையுடன் தந்திருப்பதும் ரசிக்க வைக்கிறது. அதேபோல நான்கு கதைகளை ஒன்றாக்க ‘தயாரிப்பாளருக்குக் கதை சொல்லும் யுக்தி’யை பயன்படுத்திய விதம் சாதுரியமான முடிவு. சில இடங்களில் அது செயற்கையாகத் தெரிவது மட்டும் சறுக்கல்.
மொத்தத்தில் இந்த ‘ஹாட் ஸ்பாட்’ ஆணாதிக்க உலகைக் கேலி செய்யவும், அறையவும் எடுக்கப்பட்டதாகத் தோன்றினாலும், காட்சி மொழியை நம்பாமல் அதீதமான சர்ச்சைகளை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட `வீக்’ ஸ்பாட்டாக சில இடங்களில் சுருங்கிப் போவது ஏமாற்றமே!
+ There are no comments
Add yours